மம்தா பானர்ஜிக்கு கிடைத்த பெருமை - இந்தியாவின் ஒரே பெண் முதல்வர்

தற்போது இந்திய நாட்டில் ஆட்சியில் இருக்கும் ஒரே பெண் முதல்வர் மம்தா பானர்ஜி மட்டுமே..!!

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Dec 18, 2018, 02:04 PM IST
மம்தா பானர்ஜிக்கு கிடைத்த பெருமை - இந்தியாவின் ஒரே பெண் முதல்வர்
Zee Media

இந்தியாவில் மொத்தம் 29 மாநிலங்கள் மற்றும் ஏழு யூனியன் பிரதேசங்கள் உள்ளன. ஆனால் இவை அனைத்திலும் ஒரு மாநிலத்தை தவிர்த்து மற்ற மாநிலங்களில் ஆண்களே ஆட்சியில் முதல்வராக உள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும் ஒரு பெண் முதலமைச்சராக உள்ளார். அவர் மம்தா பானர்ஜி ஆவார். தற்போது ஆட்சியில் இருக்கும் ஒரே பெண் முதல்வர் என்ற பெருமையை மம்தா பானர்ஜி பெற்றுள்ளார். 

அது எப்படி சாத்தியமாயிற்று என்று பார்ப்போம். அதற்காக இந்த நடப்பு ஆண்டை(2018) கணக்கில் எடுத்துக்கொள்வோம். இந்த ஆண்டு தொடக்கம் முதல் இந்தியாவில் மொத்தம் மூன்று பெண் முதலமைச்சர்கள் இருந்தனர். ஒன்று ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி, ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே மற்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆவார்கள். 

இதில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாஜக மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. மாநிலத்தின் முதல்வராக மெஹபூபா முஃப்தி இருந்தார். பின்னர் மக்கள் ஜனநாயக கட்சிக்கு அளித்து வந்த தனது ஆதரவை பாஜக திரும்பப்பெற்றுக் கொண்டது. இதனால் அங்கு பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி கலைக்கப்பட்டது. இதன்மூலம் மெஹபூபா முஃப்தி பதவி இழக்க நேரிட்டது.

அதேபோல ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜக தோல்வி அடந்ததால், அம்மாநில முதல்வராக இருந்த வசுந்தரா ராஜே தனது பதவியை ராஜினாமா செய்தார். 

இதையடுத்து, தற்போது நாட்டில் ஆட்சியிலிருக்கும் ஒரே பெண் முதல்வர் என்ற பெருமை மம்தா பானர்ஜிக்கு கிடைத்துள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் மேற்கு வங்க மாநிலத்தின் முதல் அமைச்சராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.