ஜம்மு-காஷ்மீரில் கூடுதலாக 10 ஆயிரம் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஜம்மு - காஷ்மீரில் அனைத்து கட்சிகளும் ஒன்று கூட வேண்டும் என மெகபூபா முக்தி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் ஆதரவுடன் நடைபெறும் பயங்கரவாத தாக்குதல் அபாயம் காரணமாக, காஷ்மீர் மாநிலம் முழுவதும் வழக்கமாக 60,000 -க்கும் மேற்பட்ட வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுப்படுத்த படுகின்றனர்.
இந்நிலையில், அமர்நாத் யாத்திரை காரணமாக சமீபத்தில் அங்கு மேலும் 20,000 வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுப்படுத்தப் பட்டுள்ளனர். இதனிடையே கடந்த 25-ஆம் தேதி காஷ்மீரின் பள்ளத்தாக்குப் பகுதிக்கு மேலும் 10,000 வீரர்களைப் பாதுகாப்புக்கு அனுப்பியுள்ளது மத்திய அரசு.
திடீரென அளவுக்கு அதிகமான வீரர்கள் காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ளதால், காஷ்மீரில் நடைமுறையில் உள்ள சிறப்புச் சட்டப் பிரிவு 35A- வை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் அதனால் அங்கு எந்தக் கலவரமும் ஏற்படாமல் இருக்கவே அதிக வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாகவும் வதந்திகள் பரவின.
சிறப்புச் சட்டப் பிரிவு 35A - வின் படி, வெளி மாநிலத்தவர்கள் யாரும் காஷ்மீரில் நிலம் வாங்க முடியாது. அம்மாநில மக்களுக்கு அரசு வேலைகள் மற்றும் மானியங்களில் சிறப்புச் சலுகைகள் அளிக்கப்படும். பாஜக-வின் தேர்தல் வாக்குறுதிப்படி இந்த சட்டப்பிரிவை நீக்குவதற்காகவே படைகள் குவிக்கப்பட்டதாக வதந்திகள் பரவின.
In light of recent developments that have caused a sense of panic amongst people in J&K, I’ve requested Dr Farooq Abdullah sahab to convene an all party meeting. Need of the hour is to come together & forge a united response. We the people of Kashmir need to stand up as one
— Mehbooba Mufti (@MehboobaMufti) July 29, 2019
எனினும், சிறப்பு சட்டப் பிரிவை நீக்குவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், தற்போது அந்த நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட வாய்ப்பில்லை எனவும், பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாத குழுக்கள், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் மிகப்பெரும் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருப்பதன் காரணமாகவும் அந்தப் பகுதியில் அதிகமான பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளத தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால், மேலும் ராணுவ வீரர்கள் அனுப்பப்படுவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே. காஷ்மீரில் அதிகமான பாதுகாப்பு வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதால் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என அம்மாநில மக்கள் அடுத்த சில நாள்களுக்குத் தேவையாக அத்தியாவசிய பொருள்களை வாங்கி குவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஜம்மு - காஷ்மீரில் அனைத்து கட்சிகளும் ஒன்று கூட வேண்டும் என மெகபூபா முக்தி தெரிவித்துள்ளார்.