அருணாச்சல பிரதேச காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் பதவியில் இருந்து நபாம் துகி ராஜினாமா செய்துள்ளார்.
அருணாசல பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்-மந்திரியாக நபம் துகி இருந்தார். அவருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 21 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கினர். இதனால் காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. இதையடுத்து அங்கு ஜனாதிபதி ஆட்சி அமலானது.
இதை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் முடிவில், அருணாசல பிரதேசத்தில் முந்தைய நபம் துகி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி மீண்டும் நீடிக்க வேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். அதன்படி முதல்-மந்திரியாக நபம் துகி பதவி ஏற்றார்.
இதனிடையே அருணாசல பிரதேச மாநில பொறுப்பை கவனிக்கும் கவர்னர் ததகத்தா ராய் நேற்று முன்தினம் முதல்-மந்திரி நபம் துகிக்கு பிறப்பித்த உத்தரவில், புதிய அரசு தனது மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். இதனால் நபம் துகி நேற்று கவர்னர் ததகத்தா ராயை சந்தித்து அவசர ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் அருணாச்சல பிரதேச காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் பதவியில் இருந்து நபாம் துகி ராஜினாமா செய்துள்ளார். புதிய காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக பீமா கண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நபாம் துகிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியவர் பீமா காந்து என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்றைய நம்பிக்கை ஓட்டுப்பில் காங்கிரஸ் வெற்றி பெறும் பட்சத்தில் பிமா காந்து, சட்டசபை காங்கிரஸ் தலைவராகவும், புதிய முதல்-மந்திரியாகவும் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. நம்பிக்கை ஓட்டெடுப்பிற்கு பிறகு நடக்க உள்ள காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் பிமா காந்துவின் பெயரை முதல்-மந்திரி பதவிக்கு, நபம் துகி முன்மொழிய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.