சட்டவிரோதமாக இயங்கும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க தவறிய டெல்லி அரசுக்கு ₹ 50 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது!
புதுடெல்லி ரோஹினி பகுதியில் வசித்து வரும் என்.எஸ் யாதவ் என்பவர் தங்களது பகுதியில் இயங்கிவரும் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழல் மாசடைவதாகவும், இதனை கண்டுக்கொள்ளாமல் அரசு மெத்தனம் காட்டி வருவதாகவும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார்.
National Green Tribunal imposes Rs 50 crore fine on Delhi government for failing to stop polluting industries from working in the city. pic.twitter.com/eIpU55EzW6
— ANI (@ANI) October 16, 2018
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் தலைமையிலான 4 பேர் கொண்ட அமர்வு இந்த மனுவை விசாரித்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆதர்ஷ் குமார் பல ஆண்டுகளாக இந்த பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகள் நடந்து வருகிறது. எனினும் டெல்லி மாசுகட்டுப்பாட்டு வாரியமோ காவல்துறையோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஒருவர் மீது ஒருவர் கைகாட்டிக் கொண்டு தங்கள் பொறுப்பை தட்டி கழித்து வருகின்றனர். எனவே சட்டவிரோத நடவடிக்கைகளை கவனிக்காமல் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட அனுமதித்த டெல்லி அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் மீது ₹ 50 கோடி அபராதம் விதிக்கப்படுகிறது என தெரிவித்தார்.
மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து பேசி குழு ஒன்றை அமைத்து சட்டவிரோத தொழிற்சாலைகளை மூட டெல்லி தலைமை செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வாரம் ஒரு முறை ரோஹினி பகுதியில் அதிகாரிகள் மக்கள் குறைகேட்கும் முகாம் நடத்த வேண்டும் எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையினை வரும் நவம்பர் 30-ஆம் தேதிக்குள் தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு மின்னஞ்சல் மூலம் தலைமை செயலாளர் சமர்பிக்க வேண்டும் என பசுமை தீர்ப்பாய அமர்வு உத்தரவிட்டுள்ளது!