டெல்லி மெட்ரோ ரயில் கட்டண உயர்வை நிறுத்தி வைக்க இயலாது என்று மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த 6 மாதங்களில் 2வது முறையாக மெட்ரோ ரயில் கட்டணங்கள் உயர்த்தப்படுவதாகவும், இது மக்கள் விரோதப் போக்கு என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் முன்னதாக குற்றம்சாட்டியிருந்தார். மேலும் இந்த கட்டண உயர்வைத் தடுத்து நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மத்திய நகர்புற வளர்ச்சி மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, “மெட்ரோ ரயிலின் கட்டண கமிட்டி அளித்த பரிந்துரையின் பெயரில் இந்த கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தடுக்கவோ நிறுத்தி வைக்கவோ மத்திய அரசால் முடியாது” என்று கூறினார்.
மேலும், “டெல்லி மெட்ரோ ரயில் ஜப்பானைச் சேர்ந்த நிறுவனத்தின் கடனுதவியுடன் அமைக்கப்பட்டது. இந்த கட்டண உயர்வின் மூலமே கடனை கட்ட முடியும். கட்டண உயர்வு வேண்டாம் எனில் ஆண்டுக்கு சுமார் ரூ.3000 கோடி வீதம் ஐந்தாண்டுகளுக்கு டெல்லி மாநில அரசு வழங்க வேண்டும்.” என அவர் தெரிவித்துள்ளார்.