காஷ்மீர் மாநிலத்தில் ஏப்ரல் 9-ம் தேதி மற்றும் 12-ம் தேதிகளில் ஸ்ரீநகர், அனந்த்நாக் ஆகிய 2 பாராளுமன்ற தொகுதிகளில் இரண்டு கட்டங்களாக இடைத்தேர்தல் நடைபெறும். வரும் 15-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது.
இந்நிலையில் பிரிவினைவாதிகள் மக்கள் வாக்களிக்க வேண்டாம் என தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். தேர்தலை புறக்கணிக்குமாறு வீடுவீடாக சென்று கைப்பிரதிகளை அளித்தும் சிலரை மிரட்டியும் வருகின்றனர்.
இந்நிலையில், தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, பட்காம் மாவட்டத்துக்குட்பட்ட ஸ்ரீநகர் தொகுதியில் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும் காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியுமான பரூக் அப்துல்லா போட்டியிடுவதால் அங்கு பதற்றமான சூழல் காணப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு இங்கு அமைக்கப்பட்டிருந்த ஒரு வாக்குச்சாவடியை மர்ம நபர்கள் தீயிட்டு எரித்ததால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இன்று காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கிய ஒரு மணி நேரத்துக்கு பின்னர் பட்காம் மாவட்டத்தில் உள்ள ஹஃப்ரூ, கூரிப்போரா, டர்ட்போரா, ஹயாட்போரா ஆகிய இடங்களில் வாக்குச்சாவடிக்கு செல்லும் பொதுமக்கள் மீது வன்முறையாளர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் பெட்ரோல் குண்டுகள் வீச்சப்பட்டன.
பாதுகாப்பு படையினர் வன்முறையாளர்களை விரட்டியடிக்க முயன்றபோது அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுவதால் அங்கு பரபரப்பான சுழல் நிலவுகிறது.