பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த எண்ணெய் நிறுவனங்களின் அதிபர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை கூட்டம்...!
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தில் உள்ளனர். இந்த நிலையில் அடுத்த மாதம் 4 ஆம் தேதிக்கு பிறகு ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்யக்கூடாது என்று அமெரிக்கா எச்சரித்து உள்ளது. இதுபோன்ற நெருக்கடியான சூழலை சமாளிக்க பிரதமர் மோடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
நேற்று முன்தினம் மத்திய அமைச்சர்களுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக, இந்தியாவில் எண்ணெய், எரிவாயு ஆய்வில் ஈடுபடுவதற்கும், இவற்றின் உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக முதலீடுகளை ஈர்ப்பதற்கும் பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் நடக்கிறது. இந்த கூட்டத்துக்கு நிதி ஆயோக் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
Prime Minister Narendra Modi to meet CEOs of global oil and gas companies at 10 am today. (File pic) pic.twitter.com/f9qKZKRQRF
— ANI (@ANI) October 15, 2018
சவுதி அரேபியாவின் எண்ணெய் இலாகா அமைச்சர், ஆஸ்திரேலிய எண்ணெய் நிறுவனத்தின் தலைமை அதிகாரி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, வேதாந்தா நிறுவன தலைவர் அனில் அகர்வால் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர். பெட்ரோல், டீசல், எரிவாயுவின் விலையை கட்டுப்படுத்துவது, இவற்றின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது, எண்ணெய் துறையில் முதலீடுகளை ஈர்ப்பது, முதலீடுகளுக்கான விதிமுறைகளை எளிதாக்குவது, ஆழ்கடலில் எண்ணெய் வள ஆய்வு, ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை ஆகியவை பற்றி இந்த கூட்டத்தில் பிரதமர் விரிவான ஆலோசனை நடத்துகிறார்.
குறிப்பாக பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருவதால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுவதை தடுப்பதற்கான திட்டங்கள் குறித்த ஆலோசனைகளுக்கு கூட்டத்தில் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் பிரதமர் மோடி எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் நடத்தும் 3 ஆவது ஆலோசனை கூட்டம் இதுவாகும்.