தேசிய மருத்துவ கமிஷன் மசோதாவிற்கு குடியரசு தலைவர் ஒப்புதல்!

பாராளுமன்ற இரு சபைகளிலும், தேசிய மருத்துவ கமிஷன் மசோதா நிறைவேறிய நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று இந்த மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.

Updated: Aug 9, 2019, 10:27 AM IST
தேசிய மருத்துவ கமிஷன் மசோதாவிற்கு குடியரசு தலைவர் ஒப்புதல்!

பாராளுமன்ற இரு சபைகளிலும், தேசிய மருத்துவ கமிஷன் மசோதா நிறைவேறிய நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று இந்த மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.

குடியரசுத்தலைவர் ஒப்புதல் பெற்ற பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர், ஹர்ஷ்வர்தன் தெரிவிக்கையில்., குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதால், மத்திய அரசாணை வெளியாகும். அதன் பின், விதிமுறைகள் வகுக்கப்படும். அதை தொடர்ந்து, தேசிய மருத்துவ கமிஷன் அமைக்கப்படும். இந்தப் பணிகள் ஆறு மாதங்களுக்குள் நிறைவடையும் என தெரிவித்துள்ளார்.

மேலும் மத்திய அரசின், தொலைநோக்கு திட்டம் இது. இதனால், மருத்துவக் கல்வித்துறை சீரடையும்; மருத்துவ மாணவர்களின் சுமை குறையும். மருத்துவக் கல்வி, வலுவான நெறிகளுடன் புனிதமானதாக மாறும் எனவும் தெரிவித்துள்ளார்.

1956-ஆம் ஆண்டு துவங்கி செயல்பாட்டில் இருக்கும் இந்திய மருத்துவ கவுன்சிலை ரத்து செய்து அதற்கு மாற்றாய் தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கான சட்ட மசோதாவை ஆளும் பாஜக அரசு நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதாவிற்கு தமிழக திமுக MP-க்கள் உள்பட பலரும் எதிர்ப்புகள் தெரிவித்த நிலையில், கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

மருத்துவ கல்வியில் புதிய சீர்த்திருத்தங்களை அமல்படுத்துவதற்கு வகைசெய்யும் தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கான மசோதா, தனியாருக்கு சாதகமாக இருப்பதாகக் கூறி இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு கிளம்பியது. 

மேலும், தேசிய மருத்துவ ஆணைய மசோதாவின்படி, MBBS படிப்பின் இறுதி ஆண்டில் நேஷனல் எக்ஸிட் டெஸ்ட் (NEXT) என்ற பெயரில் பொதுவான தேர்வு நடத்தப்படும். இந்தத் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர்ச்சேர்க்கை மேற்கொள்ளப்படும். அத்துடன், எம்பிபிஎஸ் படிப்பை நிறைவு செய்த பின்னர் மருத்துவராக பணியாற்றுவதற்கு உரிமம் பெறுவதற்கான தேர்வாகவும் இது இருக்கும். மேலும், வெளிநாடுகளில் மருத்துவக் கல்வி பயின்ற மாணவர்களுக்கான தர நிர்ணயத் தேர்வாகவும் இது நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது மருத்துவ மாணவர்கள் மத்தியில் கடும் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் இதுகுறித்து அமைச்சர் ஹர்சவர்தன் தெரிவிக்கையில்., மருத்துவ மாணவர்களின் சந்தேகங்கள், கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது. அவர்களும் புரிந்து கொண்டுள்ளனர். வரும் காலங்களில் மருத்துவக் கல்வி உன்னத நிலையை அடையும் என தெரிவித்துள்ளார்.