புதுடெல்லி: இந்த மாத இறுதியில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க்கில் நடக்கிறது. அதில் இந்தியாவின் சார்பாக பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான்கானும் ஒரே நாளில் நேருக்கு நேர் சந்திக்க உள்ளனர். செப்டம்பர் 27 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுவார். அதன்பிறகு அடுத்த சில மணி நேரத்தில் பாகிஸ்தான் பிரதமர் உரையாற்றவுள்ளார்.
2014 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியும் யுஎன்ஜிஏவில் (UNGA) உரையாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இரண்டாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய நாடுகள் சபையில் உரை நிகழ்த்த உள்ளார்.
2016 செப்டம்பரில் நடந்த ஐ.நா பொதுச்சபையின் 71 வது அமர்வில் காஷ்மீர் பிரச்சினை குறித்து சுஷ்மா ஸ்வராஜ் பாகிஸ்தானுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தார். சுஷ்மா ஸ்வராஜின் அந்த பேச்சு மிகவும் பிரபலமானது.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் கலந்துக்கொள்ளவும், பொது விவாதத்தில் உரையாற்றவும் சுமார் 48 நாடுகளின் தலைவர்கள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட வெளியுறவு அமைச்சர்கள் நியூயார்க்கிற்கு வர உள்ளனர்.