பெங்களூரு: பெங்களூரு டேனரி ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் ஜபி என்பவர் வசித்து வருகிறார். இந்த வீடு முபீன் என்பவருக்கு சொந்தமானதாகும். அந்த வீட்டை அவர் வாடகைக்கு விட்டுவிட்டு, வேறு பகுதியில் வசிக்கிறார். இந்நிலையில், ஜபி வீட்டின் முன்பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென்று ஒரு பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதனால் அவர் பீதி அடைந்துள்ளார். பின்னர் நேற்று அதிகாலையில் மேலும் பல அடிக்கு பள்ளம் ஏற்பட்டது.
இதுபற்றி தீயணைப்பு படைவீரர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதனையடுத்து அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது ஜபி வீட்டின் முன்பு 30 அடிக்கு பெரிய பள்ளம் ஏற்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் கொட்டிகெரேயில் இருந்து நாகசந்திரா வரை மெட்ரோ ரெயில் பாதைக்காக சுரங்க பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.இந்த பணி பல மாதங்களாக நடைபெற்ற நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் நிறைவு பெற்றிருந்தது.
சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டு இருந்த ராட்சத எந்திரமும் வெளியே வந்திருந்தது. இந்த சுரங்க பாதை அமைக்கப்பட்டதால், டேனரி ரோடு, அதை சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகளில் உள்ள கிணறு, ஆள்துளை கிணறு ஆகியவற்றை மூடும்படி மெட்ரோ ரெயில் நிர்வாகம் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, ஜபி வீட்டில் இருந்த கிணற்றையும் மெட்ரோ அதிகாரிகள் மூடி இருந்தார்கள். தற்போது அந்த கிணறு அமைந்திருந்த இடத்தில்தான் 30 அடிக்கு பெரிய பள்ளம் ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. மெட்ரோ ரெயில் பணிகள் நடந்ததால் வீட்டில் அடிக்கடி அதிர்வு ஏற்பட்டு வந்ததாகவும் ஜபி மற்றும் முபீன் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.
குறிப்பாக மெட்ரோ ரெயில் சுரங்க பாதையால் தான் தன்னுடைய வீட்டின் முன்பு பெரிய பள்ளம் ஏற்பட்டு இருப்பதாக முபீன் குற்றச்சாட்டு கூறி இருக்கிறார்.மேலும் வீட்டின் முன்பு பள்ளம் ஏற்பட்டு இருப்பதால், எந்த நேரமும் வீடு இடிந்து விழுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே தனது வீட்டை மெட்ரோ ரெயில் நிர்வாகம் எடுத்து கொண்டு, அதற்கு உரிய நிவாரணம் வழங்கும்படி முபீன் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் பள்ளம் ஏற்பட்டு இருப்பதால், அங்கு வசித்து வந்த ஜபி, அவரது குடும்பத்தினர் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், அந்த வீட்டை மெட்ரோ ரெயில் நிர்வாக அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை நடத்தி உள்ளதாகவும், கான்கிரீட் போட்டு கொடுத்து அந்த பகுதி மூடப்படும் என்றும், முழுமையாக சேதம் அடைந்திருந்தால், உரிமையாளருக்கு வீடு கட்டி கொடுக்க தேவையான நடவடிக்கையை மெட்ரோ ரெயில் நிர்வாகம் எடுக்கும் என்றும் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த சம்பவம் பெங்களூருவில் அப்பகுதி மக்களிடையே பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ALSO READ Bizarre Smuggling: 42 லட்சம் மதிப்புள்ள தங்க பேஸ்ட் மலக்குடலில் வைத்து கடத்தல்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR