மீண்டும் ப்ளே ஸ்டோரில் வந்தது TikTok: மகிழ்ச்சியில் பயனாளர்கள்

TikTok மீதான தடை நீக்கப்பட்டதின் பேரில் TikTokக்கை ப்ளே ஸ்டோர் மீண்டும் கொண்டுவந்துள்ளது

Last Updated : Apr 30, 2019, 12:06 PM IST
மீண்டும் ப்ளே ஸ்டோரில் வந்தது TikTok: மகிழ்ச்சியில் பயனாளர்கள் title=

TikTok மீதான தடை நீக்கப்பட்டதின் பேரில் TikTokக்கை ப்ளே ஸ்டோர் மீண்டும் கொண்டுவந்துள்ளது

சீனாவை மையமாக கொண்டு இயங்கும் TikTok என்னும் செயலி கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இளைஞர்கள், மாணவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த செயலியை பயன்படுத்திய 400-க்கும் மேற்பட்ட நபர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்னும் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கின்றது. பல்வேறு வகையிலும் தீமையை தரும் TikTok செயலிக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என மதுரை அண்ணாநகரை சேர்ந்த எஸ்.முத்துக்குமார் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். 

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிமன்றம், TikTok செயலியை மத்திய அரசு தடை செய்ய வேண்டும். TikTokசெயலி மூலம் எடுத்த வீடியோக்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பக்கூடாது என்று உத்தரவிட்டது. இந்த வழக்கு குறித்து மத்திய அரசு பதில் அளிக்கவும் உத்தரவிடப்பட்டு இருந்தது.

இதற்கிடையே, இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு கடந்த 16-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது, டிக்-டாக் செயலியை உருவாக்கிய நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஐசக் மோகன்லால், “TikTok செயலியை 2 வகையாக கண்காணித்து வருகிறோம். இனிமேல் தவறான நோக்கத்துடன் வீடியோக்கள் பதிவு செய்யப்படமாட்டாது. நீதிமன்ற உத்தரவுக்கு பின்பு, பல லட்சம் வீடியோக்கள் அழிக்கப்பட்டுள்ளன. கோர்ட்டு தடை விதித்து இருப்பதால், தற்போது TikTok செயலியை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. எனவே அந்த தடையை விலக்கி உத்தரவிட வேண்டும்” என்று வாதாடினார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள் மேலும், “இந்த வழக்கு குறித்து மத்திய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனம் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. எனவே TikTok செயலி மீதான நடவடிக்கை குறித்து மத்திய அரசின் தகவல் தொழில் நுட்பத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம் சமூக  சீர்கேட்டை உருவாக்கும் வீடியோக்கள் சிறுவர், சிறுமியர் தொடர்பான ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்யக்கூடாது என்ற நிபந்தனையுடன் TikTok செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது. 

இந்நிலையில் இதனையடுத்து கூகுள் நிறுவனம், ப்ளேஸ்டோரில் இருந்து நீக்கிய TikTok செயலியை மீண்டும் தரவிறக்கம் செய்யும் வகையில் கொண்டு வந்துள்ளது. இதனால் TikTok பயனாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

Trending News