தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்க வரும் பயணிகளுக்கு இனி சூரிய உதயத்துக்கு 45 நிமிடங்களுக்கு முன்னதாகவே நுழைவு சீட்டு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து கலாச்சார துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா நாடாளுமன்றத்தில் பேசுகையில், தாஜ்மகாலை பார்வையிடும் நேரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. நுழைவு சீட்டு வழங்கும் அறை காலை சூரிய உதயத்திற்கு 45 நிமிடங்களுக்கு முன்பு திறக்கப்பட்டு, சூரியன் மறைவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு மூடப்படும்.
இதனால் சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பது தவிர்க்கப்படும். தாஜ்மகாலை சுற்றிப்பார்க்க 3 மணி நேரம் மட்டுமே அனுமதிச் சீட்டில் உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், நுழைவு கட்டணம் ரூ.40-ல் இருந்து ரூ.50-ஆக சமீபத்தில் உயர்த்தப்பட்டது.
தற்போது, இந்தக் கட்டணமும் வரும் ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து 200 என அதிகரிப்பு செய்யப்பட உள்ளது. வெளிநாட்டுப் பயணிகளுக்கு 400 என்றிருந்த கட்டணம் இப்போது 1,250-ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.