விக்கிபீடியா வேங்கைத்திட்டம் என்ற பெயரில் இந்திய மொழிகளில் கட்டுரைப் போட்டி நடத்தி இருந்ததில் தமிழ் மொழி அதிக கட்டுரைகளைக் கொண்டு முதலிடத்தைப் பிடித்துள்ளது.
விக்கிபீடியாவும், கூகுள் இணையதளமும் இணைந்து மூன்று மாதங்களுக்கு கட்டுரைப் போட்டி நடத்துகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 10 முதல் 2020 ஜனவரி 10 வரை வேங்கைத் திட்டம் என்று ஒரு கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது. இதில், முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களுக்கு பரிசு அளிக்கிறது. இதன்படி கடந்தாண்டு அக்டோபர் முதல் 2020 ஜனவரி வரை தமிழ் கட்டுரைகள் எழுதி அனுப்பலாம் என்று அறிவிப்பு வெளியாகி இருந்தது.
தேசிய அளவில் உள்ள மொழிகளில் இந்தக் கட்டுரைப் போட்டிக்கு அழைப்பு விடப்பட்டு இருந்தது. கொடுக்கும் தலைப்பில் 300 வார்த்தைகளுக்குள் எழுத வேண்டும். கூகுள் மொழி பெயர்ப்பை பயன்படுத்தக் கூடாது. மற்ற மொழி பெயர்ப்பு கருவிகளையும் பயன்படுத்தக் கூடாது. தகவல்கள் நிறைந்து இருக்க வேண்டும்.
கடந்தாண்டு முதல் முறையாக இந்த தேர்வு நடத்தப்பட்டது. கடந்தாண்டு இந்தி மொழியில் அதிக கட்டுரைகள் வெளியாகி முதல் இடத்தைப் பிடித்து இருந்தது. ஆனால், நடப்பாண்டில் முடிந்த தேர்வில் தமிழ் மொழி முதல் இடத்தைப் பிடித்துள்ளது. சர்வதேச அளவில் இருந்து தமிழர்கள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர்.
62 விக்கிப்பீடியர்கள் தமிழ் சார்பாகப் பங்கெடுத்து 2942 கட்டுரைகளை எழுதி, தமிழ் இந்தாண்டு முதலிடத்தைப் பெற்றுள்ளது. போட்டிக்காக இந்திய மொழிகளில் மொத்தம் எழுதப்பட்ட கட்டுரைகளில் இது 24% ஆகும். கட்டுரை எண்ணிக்கை மட்டுமல்லாமல் பங்கெடுத்தவர்கள் எண்ணிக்கையிலும் முதலிடம்.