வாழ்க்கை ஒரு வினோதம், வாழ்க்கை ஒரு விடுகதை, வாழ்க்கை ஒரு விளையாட்டு, இதனை உணர்த்தும் வகையில் அவ்வப்போது சில செய்திகள் நம்மை வந்தடைகின்றன. அப்படி வந்த செய்திதான் பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் மரணச் செய்தி!!
நம் இந்தியத் திரைப்படங்களைப் பொறுத்த வரை, பாடல்கள் இன்றியமையாதவை. ஆனால், பாடல்களை இன்றியமையாத அம்சங்களாக நிலைத்திருக்கச் செய்ததில் பல இசைக் கலைஞர்களின் பங்கு உள்ளது. SP Balasubrahmanyam என்ற சகலகலா வல்லவனுக்கு அதில் ஒரு சிறப்பு இடம் உள்ளது.
ALSO READ:SPB: இசையின் சிகரம் சரிந்தது... சிகரம் கடந்து வந்த பாதை...!!!
ஜீவ சுகம் பெற ராக நதியினில் நம்மை நீந்த வைத்த ஜீவன் இன்று இல்லை. ஆனால் அவரே பாடி இருப்பது போல, உடலுக்குத் தானே மரணம், உணர்விற்கு இல்லையே!! தேகத்திற்குத் தானே மரணம், இசைக்கு இல்லையே!! நம் மனம் உள்ள வரை அவர் பாடல் அதில் இருக்கும் என்பதுதான் உண்மை.
குரலை ஆண்டவன் அனைவருக்கும் தான் கொடுத்துள்ளான். ஆனால், அவருக்கு மட்டும் குழலையே குரலாய் படைத்தானோ? கோடியில் அவர் குரல் கேட்டாலும் குதூகலம் பிறக்கிறதே!!
பலர் பாடகர்களாய் இருந்துள்ளார்கள், இருக்கிறார்கள். ஆனால் பாலுவுக்கு மட்டும் என்ன தனி மவுசு? ஏனென்றால், பாலுவின் பாடல், காதுகோளோடு நில்லாமல், அணுக்களையும் ஆராய்கிறதே! மனதை மயக்குகிறதே! இதயத்தை இதமாக்குகிறதே!!
அவர் பாடும் பாடலுக்கேற்ப நம் மனம் மாறுவதை நாம் பார்த்துள்ளோம். அவரது மகிழ்ச்சியான பாடல்களைக் கேட்டால், நம் மனம் துள்ளிக் குதிக்கும். வாழ்க்கையில் முன்னேறுவது பற்றி பாடினால், நம்முள் உறுதி பிறக்கும். சோகப் பாடல்கள் நம்மை கண்ணீர் சிந்த வைக்கும். காதல் பாடல்கள் நம் உதடுகளில் புன்னகையைக் கொண்டு வரும். இப்படி தன் குரலால் நம்மை இசை நகரில் ராஜ பவனி அழைத்துச் சென்று, நம் மன உணர்வுகளுக்கு ஒரு உருவம் கொடுத்த உன்னத மனிதர் SPB.
காதல், கம்பீரம், ஆசை, ஆக்ரோஷம், பரிவு, பச்சாதாபம், அன்பு, பண்பு, கோவம், தாபம், முன்னேற்றம், முற்போக்கு… இப்படி எத்தனை எத்தனை உணர்ச்சிகளை தன் குரலால் பிறர் இதயங்களில் செலுத்தியுள்ளார் SPB!!
நிலாவைப் பார்த்தாலும், மலரைப் பார்த்தாலும், குழலைப் பார்த்தாலும், குழல் ஊதும் கண்ணனைப் பார்த்தாலும், அந்தி மழையைப் பார்த்தாலும், மலையோரம் வீசும் காற்றை சுவாசித்தாலும்…. எதிலும், எப்போதும் SPB-ன் நினைவு வருவதை தடுக்க முடியாது. அப்படி வரும் போது இனி யாரைப் பார்ப்பது?
பாடகனாய் செவிக்கும், மனதுக்கும் விருந்து படைத்த SPB நடிகனாக நம் கண்களுக்கு விருந்து படைத்த நேரங்களும் ஏராளம். காதலன் படத்தில் அவர் நடித்த ‘அப்பா’ கதாப்பாத்திரம் இப்படி ஒரு அப்பா நமக்கும் இருக்க மாட்டாரா என இளசுகளை ஏங்க வைத்து.
‘கேளடி கண்மணி’ படம் அவரது நடிப்புத் திறனின் பல பரிணாமங்களைக் காட்டியது. அவர் ஏன் இன்னும் பல படங்களில் நடிக்கக்கூடாது என கேள்வி கேட்க வைத்தது. ‘மனதில் உறுதி வேண்டும்’ படத்தில் மருத்துவராய் வந்து மனதை மயக்கியவர் அல்லவா SPB!!
தன் தனிப்பட்ட வாழ்க்கையில் எளிமையின் சிகரமாக வாழ்ந்த SPB, தன்னால் ஆன உதவிகளை எத்தனையோ மக்களுக்கு செய்துள்ளார். அவர் உடல் மட்டும் பெரிதாக இருக்கவில்லை, உள்ளம் அதை விடப் பெரியதாக இருந்தது.
பாடகராய், நடிகராய், சமூக சிந்தனையாளராய், நல்ல மனிதனாய் வாழ்ந்த SPB இன்று நம்மிடையே இல்லை. அவ்வாறு கூறுவது கூட தவறுதான்.
ஒரு உடலாக இருந்த SPB இனி உணர்வாகி விட்டார்!
ஒரு இடத்தில் வாழ்ந்த SPB இனி ஒவ்வொரு இதயத்திலும் வாழ்வார்!!