மொழிகளுக்கு இடையே எந்த சுவரும் இல்லை - பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் சேதுபதி!

Merry Christmas: விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப்,  ராதிகா ஆப்தே நடிப்பில் உருவாகி உள்ள மெரி கிறிஸ்மஸ் படம் வரும் பொங்கல் அன்று வெளியாக உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jan 8, 2024, 11:18 AM IST
  • விஜய் சேதுபதி நடித்துள்ள ஹிந்தி படம்.
  • பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது.
  • ஸ்ரீராம் ராகவன் இந்த படத்தை இயக்கி உள்ளார்.
மொழிகளுக்கு இடையே எந்த சுவரும் இல்லை - பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் சேதுபதி! title=

Vijay Sethupathi: பாலிவுட் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'மெரி கிறிஸ்மஸ்'. இதில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப், ராதிகா ஆப்தே, ராதிகா சரத்குமார், சண்முகராஜன், கவின் பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ப்ரீத்தம் இசையமைத்திருக்கிறார். தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் மேட்ச் பாக்ஸ் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ரமேஷ் தௌராணி,  சஞ்சய் ரௌத்ரே, ஜெயா தௌராணி, கேவல் கர்க் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.  இந்த திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதியன்று வெளியாகிறது.  இதை முன்னிட்டு சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, இயக்குநர் ஸ்ரீராம் ராகவன், பட தொகுப்பாளர் பூஜா லதா ஸ்ருதி, நடிகை கத்ரீனா கைஃப், நடிகர் சண்முகராஜன், நடிகர் கவின் பாபு, பாடலாசிரியர் யுகபாரதி, பின்னணி குரல் கலைஞர் தீபா வெங்கட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க | ரம்பாவை பின்னால் தட்டிய ரஜினி..! ஷாக்கான நடிகை..நடந்தது என்ன?

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி பேசுகையில், '' எனக்கு இந்தப் பட வாய்ப்பு கிடைத்தது கூட ஆச்சரியமாக இருக்கிறது. சில தருணங்களில் நம்முடைய வாழ்க்கையில் சொல்லாமல் கொள்ளாமல் சில விசயங்கள் நடைபெறுவதுண்டு. அது போன்றது தான் ஸ்ரீராம் ராகவனின் சந்திப்பு. மெல்பெர்னில் சந்தித்தோம். பிறகு மும்பையில் இருந்து காணொளியில் பேசுவார். அவருடைய சிறப்பம்சமே காணொளி வாயிலான உரையாடலை வீடியோவாக எடுத்து அனுப்புவது தான். அவரது இயக்கத்தில் உருவான முதல் படம் 'ஏக் ஹசீனா தி'. அது 2004 ஆம் ஆண்டில் என்னுடைய பிறந்தநாளன்று வெளியானது. அப்போது என்னுடைய நண்பர் ஒருவர் இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் உதவியாளர் ஸ்ரீராம் ராகவன் என்பவர் படத்தை இயக்கியிருக்கிறார். படம் நன்றாக இருக்கிறது. பார் என்றார். நான் அந்தப் படத்தை பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்போது இவரது இயக்கத்தில் நாம் நடிக்க முடியுமா?  என்று எண்ணினேன்.  அதன் பிறகு ஐநாக்சில் அவர் இயக்கத்தில் வெளியான 'பட்லாபூர்' எனும் திரைப்படத்தை பார்த்தேன். அந்த படமும் எனக்கு பிடித்திருந்தது. 

அதன் பிறகு என்னை சந்தித்து 'மெரி கிறிஸ்துமஸ்' படத்தின் கதையை சொன்னார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இது செப்டம்பர் மாதம் நடந்தது. அதன் பிறகு அவரிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை. எனக்குள் சிறிய பயம் எட்டிப் பார்த்தது. பிறகு தயாரிப்பாளர் சஞ்சய் அவர்களை தொடர்பு கொண்டு.. ஜனவரி மாதம் என்னுடைய பிறந்தநாள் வருகிறது.  அப்போது ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாமா?  என கேட்டேன். உடனே அவர்கள் சரி என்று ஒப்புக் கொண்டார்கள். அதன் பிறகு சற்று நம்பிக்கை வந்தது. அதனைத் தொடர்ந்து அவரை சந்தித்தது..  பேச்சுவார்த்தை நடத்தியது.. அவரது அலுவலகத்தில் அமர்ந்து பல விசயங்களை உரையாடியது.. அனைத்து சந்திப்பின் போதும் எனக்கு ஒரு நடிகனுக்கான சுதந்திரத்தை நிறையக் கொடுத்தார். படப்பிடிப்பு தளத்தில் எங்களிடமிருந்து அவர் வேலை வாங்குவது சௌகரியமானதாக இருக்கும். அவருடன் செலவிடும் நிமிடங்கள் அனைத்தும் இயல்பாக இருக்கும். அவருடன் இணைந்து பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்தது. 

அதனைத் தொடர்ந்து அவரது உதவியாளரும், கதாசிரியரும், பட தொகுப்பாளருமான பூஜா மேடம். அவர்கள் ஒரு காட்சிக்கு என்ன தேவை என்பதற்கு எளிமையாக விளக்கம் கொடுப்பதும் வியப்பைத் தரும்.  கத்ரீனா கைஃப்பை நேரில் பார்த்ததும் எனக்குள் சிறு ஆச்சரியம். அவர் நம்மை விட சீனியர் ஆர்டிஸ்ட். இரண்டு தசாப்தங்களாக திரைத்துறையில் இருக்கிறார்.. என்ற பயமும் இருந்தது.  படப்பிடிப்பு தளத்திற்குள் நுழைந்ததும் அவருக்கான காட்சி குறித்த விசயங்களில் மட்டுமே கவனம் செலுத்தினார். அவர் அந்த சூழலை மிகவும் இயல்பாக சௌகரியமாக மாற்றினார்.  இந்த படத்தில் நடித்திருக்கும் நடிகர் கவின் பாபு கூத்துபட்டறையில் பயிற்சி பெற்றவர். அவரும் நன்றாக நடித்திருக்கிறார்.  

நான் துபாயில் மூன்றாண்டு காலம் பணியாற்றிய போது தான் முதன் முதலாக இந்தியை என்னுடைய பாஸ் பேச கேட்டிருக்கிறேன். அதில் பிறகு சின்ன சின்ன வார்த்தைகளை பேசி இருக்கிறேன். அதன் பிறகு இந்தி பேசி 13 ஆண்டுகள் ஆகிவிட்டது. 'ஃபார்ஸி' படத்தில் பணியாற்றும்போது இந்தி பேசுவதற்கு கஷ்டமாக இருந்தது. அதன் பிறகு சற்று சரளமாக பேசத் தொடங்கினேன். இந்த படத்தில் நான் தான் இந்தி பேசியிருக்கிறேன். அது எப்படி பேசி இருக்கிறேன் என்பதை படம் வெளியான பிறகு தான் தெரிய வரும்.  பணியாற்றும் இடத்தில்தான் மொழிகளுக்கு ஏற்ற ஒலி இருக்கும். அதை கேட்டு பேசுவதில் மட்டும் தான் வேறுபாடு இருக்கும், மற்ற அனைத்தும் ஒன்றுதான். தற்போது டிஜிட்டல் தளங்கள் வந்துவிட்ட பிறகு மொழிகளுக்கு இடையே எந்த சுவரும் இல்லை. இந்த திரைப்படம் ஜனவரி 12-ம் தேதி அன்று வெளியாகிறது. இப்படத்தை நாங்கள் அனைவரும் பார்த்து விட்டோம். எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்'' என்றார். 

நடிகை கத்ரீனா கைஃப் பேசுகையில், '' சென்னை எனக்கு இரண்டாவது வீடு போன்றது. ஏனெனில் என்னுடைய தாயார் ஒன்பது வருடங்கள் மதுரையில் ஆசிரியையாக பணியாற்றினார். இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தவுடன் மிகவும் உற்சாகமடைந்தேன். முதன் முதலில் தமிழில் அறிமுகமாகிறோம். அதுவும் விஜய் சேதுபதி மற்றும் ஸ்ரீராம் ராகவனுடன் இணைந்து உருவாக்கும் படத்தில் நடிக்கிறோம். இதற்கு முன் மலையாளம், தெலுங்கு ஆகிய படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் தமிழில் முதல் முதலாக நடித்திருப்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன். இந்தப் படத்திற்காக நடைபெற்ற ஒர்க் ஷாப்பில் விஜய் சேதுபதியும், நானும் கலந்து கொண்டோம். அதுவும் நல்ல அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பு தளத்தில் விஜய் சேதுபதி சில தமிழ் வார்த்தைகளை கற்றுக் கொடுத்தார் அதில் 'ரொம்ப கஷ்டமாக இருந்தது' என்ற வார்த்தையை பேசுவேன்.  படப்பிடிப்பு தளத்தில் என்னுடைய தமிழ் உச்சரிப்புக்கு நடிகை தீபா வெங்கட் உதவி செய்தார்'' என்றார்.

மேலும் படிக்க | தலைவர் 171 படத்திற்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News