அஸ்வின் என்னுடைய அனைத்து சாதனைகளையும் முறியடிக்க வேண்டும் என கும்பிளே மனதார பாராட்டியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக ராஞ்சியில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகள் எடுத்தார். அத்துடன் தன்னுடைய டெஸ்ட் கிரிக்கெட் கேரியரில் 35வது முறையாக ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட் எடுத்திருக்கிறார்.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக முறை 5 விக்கெட் எடுத்த இந்திய வீரர் என்ற அனில் கும்ப்ளேவின் வாழ்நாள் சாதனையை அஸ்வின் சமன் செய்துள்ளார். சொல்லப்போனால் கும்ப்ளே 132 போட்டிகளில் எடுத்த 35 ஐந்து விக்கெட்டுகளை அஸ்வின் 99 போட்டிகளிலேயே எடுத்துள்ளார்.
இந்நிலையில் தம்மை விட வருங்காலங்களில் அஸ்வின் அதிக 5 விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைக்க வேண்டும் என்று அனில் கும்ப்ளே மனதார பாராட்டியுள்ளார்.
இது பற்றி அவர் ஸ்போர்ட்ஸ்18 தொலைக்காட்சியில் பேசியபோது, “இது அஸ்வினிடமிருந்து நல்ல முயற்சி. இந்தத் தொடரில் அஸ்வின் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்ற பேச்சுக்கள் இருந்தது. ஆனால் இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கக் கூடிய இன்றைய முக்கியமான நாளில் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.
35 முறை 5 விக்கெட்டுகளை எடுத்துள்ள அபாரமான சாதனையும் அஸ்வினை நோக்கி வந்துள்ளது. என்னுடன் அவர் இருப்பதை பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
கண்டிப்பாக அவர் இதையும் தாண்டி செல்வார் என்று என்னால் சொல்ல முடியும். இன்னும் நிறைய போட்டிகளில் விளையாட உள்ள அவர் இந்தியாவுக்கு நிறைய போட்டிகளில் வெற்றியை பெற்றுக் கொடுப்பார்” என்று கூறினார்.