India National Cricket Team: டி20 உலகக் கோப்பை தொடருக்கான (ICC T20 World Cup 2024) இந்திய அணியில் 10 வீரர்களின் இடம் ஏறத்தாழ உறுதியாகி உள்ள நிலையில், மீதம் உள்ள 5 இடங்களுக்குதான் கடுமையான போட்டி நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி (Team India) குறித்து இன்னும் எதுவும் உறுதியாகாத நிலையில், நீங்கள் கேட்கும் அத்தனை செய்திகளும் முற்றிலும் பொய் என்று ரோஹித் சர்மா கூறியிருந்தாலும், இந்த 10 வீரர்களின் இடம் உறுதி என்பது அவர்களின் திறன் சார்ந்தே கூறப்படுகிறது.
ஐபிஎல் தொடர் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இரண்டாம் கட்ட லீக் சுற்று போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், ஜூன் 1ஆம் தேதி முதல் டி20 உலகக் கோப்பை தொடர் மேற்கு இந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது.
இதில் இந்திய அணி ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. இதே பிரிவில் பாகிஸ்தான், கனடா, அயர்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட அணிகள் இடம்பெற்றுள்ளன. மொத்தம் 20 அணிகள் நான்கு பிரிவுகளாக முதல் சுற்றில் விளையாட உள்ளன.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான 15 வீரர்கள் அடங்கிய இந்திய அணி இம்மாத இறுதியில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இதனால், இந்திய அணி தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், அஜித் அகர்கர் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், 15 வீரர்கள் கொண்ட ஸ்குவாடுக்கு 10 வீரர்கள் ஏறத்தாழ தேர்வாகிவிட்டனர் எனவும், மீதம் உள்ள 5 இடங்களுக்குதான் பல வீரர்களுக்கு இடையில் கடும் போட்டி நிலவுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
விராட் கோலி, ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரிட் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பந்த், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், குல்தீப் யாதவ் ஆகியோர் நிச்சயம் டி20 உலகக் கோப்பையில் இடம்பெறுவார்கள் என கூறப்படுகிறது.
அதேபோல், ஓப்பனர்களின் பேக்-அப்பாக சுப்மான் கில் அல்லது யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரில் ஒருவர் தேர்வு செய்யப்படலாம். நடப்பு ஐபிஎல் தொடரில் ஜெய்ஸ்வால் மோசமான ஃபார்மில் இருக்கிறார், சுப்மன் கில்லும் சுமாரான ஃபார்மில்தான் உள்ளார். சுழற்பந்துவீச்சில் ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் பிரதான வீரர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு பேக்அப்பாக சஹால், அக்சர் படேல், ரவி பிஷ்னோய் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்புள்ளது.
தொடர்ந்து விக்கெட் கீப்பர் பேட்டர்களான பேக்அப்பில் சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல், துருவ் ஜூரேல், இஷான் கிஷன், ஜித்தேஷ் சர்மா என 5 வீரர்கள் உள்ளனர். இவர்களில் எத்தனை பேர் இந்திய அணியில் இடம்பெறுவார்கள் என்பது அணி தேர்வாளர்களுக்கே வெளிச்சம். அதேபோல், மிடில் ஆர்டர் அதிரடிக்கு சிவம் தூபே, ரின்கு சிங், ரியான் பராக் ஆகியோருக்கு கடும் போட்டி நிலவும்.