ஒற்றைத் தலைவலி என்பது, நமது அன்றாட வாழ்க்கையினை முடக்கும் சக்தி கொண்ட ஒரு உடல்நல பிரச்சனை. மைக்ரேன் தலைவலி என்றும் அழைக்கப்படும் இந்த தலைவலி வந்தால், தலைவலி தாங்க முடியாத அளவு மிகக் கடுமையாக இருக்கும்.
மைக்ரைன் என்னும் ஒற்றை தலைவலி, ஆண்களைவிட பெண்களுக்கு தான் அதிகம் ஏற்படுவதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்த தலைவலி 2 மணி நேரம் முதல் 72 மணி நேரம் வரை கூட நீடிக்கலாம்.
ஒற்றைத் தலைவலி அடிக்கடி ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஒழுங்கற்ற உணவு முறை முதல் ஹார்மோன் மாற்றங்கள் வரை பல காரணங்கள் இதற்கு இருக்கலாம்.
காலை உணவை தவிர்த்தல்: இன்று அவசர ததியிலான வாழ்க்கையில், காலை உணவை தவிர்க்கும் பழக்கம் பலருக்கு உள்ளது. இதனால் வயிறு ஆரோக்கியம் கெட்டு போய் ஒற்றை தலைவலி ஏற்பட காரணம் ஆகிறது.
மன அழுத்தம் அல்லது டென்ஷன் காரணமாக, அடிக்கடி ஒற்றை தலைவலி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மன அழுத்தம் மற்றும் டென்ஷனை தவிர்க்க, தியானம் யோகா போன்ற பயிற்சியில் ஈடுபடுவதால் பிரச்சனையை குறைக்கலாம்.
தூக்கமின்மை பிரச்சனை இருந்தால் ஒற்றைத் தலைவலி அடிக்கடி ஏற்படும். இதனால், தினமும் 7 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் அவசியம். நல்ல தூக்கம் உடல் மற்றும் மன ஆரோக்கியம் இரண்டிற்கும் அவசியம்.
ஆரோக்கியமற்ற உணவுகள்: துரித உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவற்றை அதிகம் சாப்பிடுவதால், செரிமான பிரச்சனைகள் ஏற்பட்டு ஒற்றைத் தலைவலி ஏற்படும். இவற்றால் உடல் எடையும் கூடும்.
மாதவிடாய் பிரச்சனை: மாதவிடாய் காலங்களில் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக, பெண்கள் அதிக அளவு ஒற்றைத் தலைவலி பிரச்சனையை அனுபவிக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள். அதோடு மாதவிடாய் நின்ற பிறகு, உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகரிப்பதாலும் ஒற்றைத் தலைவலி அடிக்கடி ஏற்படலாம்.
ஒற்றை தலைவலி தீர்வுகள்: ஒற்றைத்தலைவலி ஏற்படாமல் இருக்க, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை தேர்ந்தெடுப்பது நல்ல தீர்வை கொடுக்கும். நொறுக்கு தீனி, எண்ணெய் நிறைந்த பண்டங்கள், துரித உணவுகள் ஆகியவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும்.
பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.