Health Benefits Of Red Banana Juice: கோடை காலம் நெருங்கிவிட்டது. இன்னும் சில தினங்களில் உங்கள் நாவும், உடலும் மதிய பொழுதுகளில் இனி தேநீரை தேடாது. ஏதாவது பழச்சாறைதான் தேடும். அந்த வகையில், செவ்வாழைப் பழத்தை ஜூஸ் (Red Banana Juice) போட்டு குடிப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை இதில் காணலாம்.
செவ்வாழைப் பழம், சாதரண வாழைப்பழத்தை விட சற்று விலை அதிகம் என்றாலும், அதைவிட ஊட்டச்சத்தும் அதிகம் உள்ளதுதான். தினமும் சாப்பிடுவதற்கு பதில் வாரத்தில் ஓரிருமுறை நிச்சயம் செவ்வாழைப் பழ ஜூஸை (Red Banana Juice) எடுத்துக்கொள்ளலாம். முறையாக மருத்துவ ஆலோசனை பெற்றும் கூட எவ்வளவு நாள்கள் இடைவெளியில் செவ்வாழைப் பழ ஜூஸ் குடிக்கலாம் என்றும் நீங்கள் கேட்டுக்கொள்ளலாம்.
செவ்வாழைப் பழத்தை அப்படியே சாப்பிட்டாலே பலன்கள் அதிகம் என்றாலும், கோடை காலத்தில் பலரும் ஜூஸ் குடிக்கவே ஆசைப்படுவார்கள். அந்த வகையில், செவ்வாழைப் பழ ஜூஸை குடிக்கும்போது சுவையும் அருமையாக இருக்கும், உடலுக்கும் எக்கச்சக்க நன்மைகள் வந்துசேரும்.
செவ்வாழைப் பழ ஜூஸ் கடைகளிலும் அல்லது நீங்களே தயார் செய்தாலும் நன்றாகவே இருக்கும். எளிமையான செயல்முறையில் இந்த ஜூஸை செய்யலாம். சர்க்கரை சேர்க்காமல் குடிப்பது கூடுதல் நன்மை. செவ்வாழைப் பழத்தை ஜூஸ் போட்டு குடித்தால் உடலுக்கு கிடைக்கும் ஐந்து ஆரோக்கிய நன்மைகள் குறித்து தொடர்ந்து காணலாம்.
இயற்கையான சர்க்கரை: செவ்வாழைப் பழத்தில் பிரக்டோஸ், சுக்ரோஸ், குளுக்கோஸ் போன்ற இயற்கையான சர்க்கரைகள் இதில் உள்ளன. இது உங்களை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உணவும். இதனால், நீங்கள் ஜிம்மில் நல்ல உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றால், செவ்வாழைப் பழ ஜூஸை முன்கூட்டியே குடிக்கலாம்.
டிப்ரஷன் வராது: செவ்வாழைப் பழத்தில் அதிகளவு வைட்டமிண் பி6 உள்ளது. இது டிரிப்டோபானை, செரோடோனினாக மாற்றும். செரோடோனின் என்பது நன்மை மகிழ்வாக வைத்திருக்க உதவும் ஹார்மோன் ஆகும். எனவே, இந்த ஜூஸை குடிப்பதன் மூலம் ஆரம்பத்திலேயே டிப்ரஷனை அடித்து விரட்டலாம்.
உடல் எடையை குறைக்க உதவும்: நீங்கள் உடல் எடையை குறைக்க நீண்ட நாள்களாக போராடி வருகிறீர்கள் என்றால், உங்கள் டயட்டில் செவ்வாழைப் பழத்தை சேர்த்துக்கொள்ளுங்கள். ஒரு பழத்தில் வெறும் 90 கலோரிகளே இருக்கும். அதில் அதிக ஃபைபரும் உள்ளதால் கொஞ்சமாக ஜூஸ் குடித்தாலும் வயிறு நிரம்பிவிடும். நீங்கள் அதிகமாக நொறுக்குத் தீனியை உண்ண மாட்டீர்கள்.
இதயத்திற்கும் நல்லது: செவ்வாழைப் பழத்தில் அதிகளவு போட்டாசியம், மேக்னீசியம் ஆகியவை உள்ளது. இது சோடியம் உப்பின் விளைவுகளை நிவர்த்தியாக்கி, ரத்த அழுத்தத்தை குறைக்கும். இதனால், நெஞ்சு வலி, பக்கவாதம் மற்றும் பிற இதயம் சார்ந்த நோய்களை தடுக்கலாம்.
நெஞ்செரிச்சல்: செவ்வாழப் பழத்தில் ஆண்டி-அசிடிட்டி தாக்கம் உள்ளது. இது வயிற்று வலியை சரியாக்கும், அதேபோன்று நெஞ்செரிச்சலையும் போக்கும். எனவே, வயிற்று வலி, நெஞ்செரிச்சல் இருக்கும்போது தயங்காமல் செவ்வாழைப் பழத்தை ஜூஸ் போட்டு குடியுங்கள்.