dhoni: சிஎஸ்கே அணிக்கு வந்தால் மட்டும் சீனியர் பிளேயர்கள் விளையாடுவது எப்படி? என்ற சீக்ரெட்டை சொல்ல மாட்டேன் என தோனி தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான பயிற்சியை தொடங்கிவிட்டார். இப்போது சொந்த ஊரில் பயிற்சி மேற்கொண்டு வரும் தோனி அங்கிருந்தவாறே சிஎஸ்கே பிளேயர்களுக்கு மெசேஜ் அனுப்பிக் கொண்டிருக்கிறார்.
மார்ச் மாத தொடக்கத்தில் அதிகாரப்பூர்வமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி சென்னை சேப்பாக்கத்தில் இருந்து தொடக்க இருக்கிறது. தோனியும் இந்த பயிற்சி முகாமில் நேரடியாக கலந்து கொள்ள இருக்கிறார்.
இந்த சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவரிடம் வாட்சன், ரஹானே ஆகியோர் சிஎஸ்கே அணிக்கு வந்த பிறகு எப்படி சிறப்பாக விளையாடுகிறார்கள்? என கேள்வி எழுப்பப்பட்டது.
அதாவது, மற்ற அணிகளில் விளையாடாமல் இருக்கும் சீனியர் பிளேயர்களை சிஎஸ்கே குறிவைத்து எடுக்கிறது. அவர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வந்தபிறகு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்கள் என தோனியிடம் கேட்டனர்.
அந்த கேள்விக்கு சிரித்துக் கொண்டே பதில் அளித்த தோனி, அதுதான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி பார்முலா. டாப் சீக்ரெட்டும் கூட. அதனை கூறிவிட்டால் என்னை அணியில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள் என தெரிவித்தார்.
மேலும், கோலா நிறுவனங்கள் எல்லாம் எப்படி தங்களின் தயாரிப்பு பார்முலாவை சிக்ரெட்டாக வைத்திருக்கிறார்களோ, அதுபோன்ற சீக்ரெட் பார்முலா அது. அதனை வெளியில் சொல்லமாட்டேன் என கூறினார் தோனி.
வெற்றிக்கான பார்முலா குறித்து தோனி பேசும்போது, எல்லோரிடமும் திறமை இருக்கிறது. அதனால் தான் விளையாடுகிறார்கள். ஆனால், அதுமட்டும் போதாது. பயிற்சியில் கிடைக்கும் அனுபவங்களை உங்களின் அறிவுக்கூர்மை கொண்டு ஆராய்ந்து, அதில் இருந்து சில மாற்றங்களை செய்து கொள்ளுங்கள்.
அப்போது நீங்கள் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். இப்போது உங்களின் இறுதி முடிவுக்காக போராடிக் கொண்டே இருங்கள். அதற்கு பயிற்சியும் அறிவுக்கூர்மையும் அவசியம். அப்படி செய்தால் எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றி உறுதியாக கிடைக்கும் என தோனி தெரிவித்தார்.