Dhruv Jurel Breaks Dhoni's Record: இந்திய அணிக்கு அறிமுகமாகியிருக்கும் இளம் வீரர் துருவ் ஜூரல் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 23 வயதான துருவ் ஜூரல் அறிமுகமாகியிருக்கிறார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றிருகுகம் அவர் இதுவரை வெறும் 15 முதல் தர போட்டிகளில் மட்டுமே விளையாடி ஒரு சதம் மற்றும் ஐந்து அரை சதங்களை அடித்திருக்கிறார்.
நாகாலாந்து அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் அதிகபட்சமாக 249 ரன்களை குவித்து இருக்கிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் அதிரடியாக விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இதன் மூலம் இப்போது இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
துருவ் ஜூரல் 23 வயது 25 நாளில் இந்திய டெஸ்ட் அணிக்கு அறிமுகமாகி இருக்கிறார். இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தோனி தன்னுடைய 24 ஆவது வயதில் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு அறிமுகமானார்.
தற்போது இந்த சாதனையை தான் ஜூரல் முறியடித்திருக்கிறார். அதாவது தோனிக்கு முன்னதாக இந்திய இளம் வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பை பெற்ற இளம் வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரானார்.
இந்தியாவுக்காக இளம் வயதிலேயே டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான விக்கெட் கீப்பர் பட்டியலில் பார்த்தீவ் பட்டேல் முதலிடத்தில் இருக்கிறார். அவர் தன்னுடைய 17 ஆவது வயதில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். இதேபோன்று தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தன்னுடைய 19 ஆவது வயதில் இந்திய அணிக்காக முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார்.
இந்திய அணியின் ஆஸ்தான விக்கெட் கீப்பராக விளங்கிய ரிஷப் பந்த் தன்னுடைய 21வது வயதில் இந்திய அணிக்காக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தனக்கென அவர் ஒரு இடத்தை பிடித்திருந்த நிலையில் விபத்து காரணமாக தற்போது கிரிக்கெட்டில் இருந்து விலகி இருக்கிறார். இதேபோன்று இஷான் கிஷன் தன்னுடைய 24 ஆவது வயதில் சர்வதேச டெஸ்ட் போட்டியில் கடந்த ஆண்டு தான் அறிமுகமானார்.
ரிஷப் பண்ட், இஷான் கிஷன் ஆகியோர் இல்லாத சூழலில் துருவ் ஜூரலுக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதனை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளும்பட்சத்தில் அவருக்கான சர்வதேச கிரிக்கெட் பயணம் பிரகாசமாக அமையும்.