Health Tips: சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும். நாம் எவ்வளவுதான் பணத்தை சம்பாதித்தாலும், ஆரோக்கியமான உடல் இல்லையென்றால் எதையும் அனுபவிக்க முடியாது.
இன்றைய பிஸியான வாழ்க்கையில், நம் ஆரோக்கியத்தில் முழு கவனம் செலுத்த நமக்கு நேரம் இருப்பதில்லை. சில பல நேரங்களில் வேலை தான் கெதி என்று கிடக்கிறோம். அதுமட்டுமில்லாமல் குடும்பம் மற்றும் குழந்தைகளை கவனிக்க வேண்டியிருப்பதால், என்ன சாப்புடுகிறோம், எந்த நேரத்தில் சாப்புடுகிறோம் என்பதில் கவனம் செலுத்த முடிவதில்லை. காலை சிற்றுண்டியை 7 மணியிலிருந்து 8 மணிக்குள்ளும், மதிய உணவை 12 மணிக்குள்ளும் இரவு உணவை 8 மணிக்குள்ளும் சாப்பிட்டு விடுவது அவசியமாகும். இதிலிருந்து 1 மணி நேரம் தாமதிக்கலாம். ஆனால், அதிக தாமதம் ஆபத்தை விளைவிக்கும்.
காலை, மதியம், இரவு என மூன்று வேளை சாப்பிடுவதைக் கூட நாம் சில சமயம் மறந்து விடுகிறோம். பலர் காலை உணவையே மறந்து விடுகின்றனர். ஆனால், அதுதான் நம் உடலுக்கு மிகவும் அவசியமாக உணவாகும். நூடுல்ஸ், பிஸ்கட் என சாப்பிட்டு அலுவலகத்திற்கு செல்கின்றனர். இது மிகவும் ஆபத்தானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
பலர் அலுவலகத்தில் அதிக வேலைக் காரணமாக சில நேரங்களில் வயிற்றின் பசியை போக்க ஆரோக்கியமற்ற உணவை சாப்பிடுகிறார்கள். ஆனால் இவை அனைத்தும் உங்கள் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். அலுவலகத்தில் மதிய உணவு நேரத்தில் சரியாக சாப்பிடுவதற்கு பதிலாக, நொறுக்கு தீனி தின்பண்டங்களை சாப்பிடுவது மற்றும் நேரம் கடந்து சாப்பிடுவது உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும். உடல் எடையை குறைப்பது மிகவும் கடினமாகி விடும்.
சமீபத்திய ஆய்வின்படி, பிற்பகல் 3 மணி அளவில் யாரெல்லாம் தினந்தோறும் மதிய உணவு சாப்பிடுகிறார்களோ, அவர்களின் எடை இழப்பு செயல்முறையும் மெதுவாக இருக்கும். இந்த நேரத்தில் சாப்பிடுவதால் உடலில் இன்சுலின் உணர்திறன் குறைவாக இருக்கும். அதனால் உடல் எடையை குறைப்பதில் பல சிக்கல்கள் ஏற்படும். பின்னர் உங்கள் உடல் எடை அதிகரித்து கட்டுக்கோப்பு இல்லாமல், சில நோய்கள் வரும் அபாயமும் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் உடல் எடையை குறித்து எச்சரிக்கையாக இருப்பது மிகவும் அவசியமானது.
உடல் எடையை குறைக்க விரும்புவோர் தினமும் உடலுக்குத் தேவையான கலோரிகளைப் பெற வேண்டும். அதாவது தினசரி 50 சதவிகிதம் மதிய உணவில், 15 சதவிகிதம் காலை உணவில், 15 சதவிகிதம் மாலை உணவில், 20 சதவிகிதம் இரவில் கலோரி இருப்பது மிக முக்கியம்.
அதேபோல தினம் நீங்கள் செய்யும் உடற்பயிற்சி உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. மனஅழுத்தத்தை குறைக்கிறது. இதனால் உடல் சோர்வின்றி இருக்கும். தற்போது உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் பிடியில் இருந்து தப்பிக்க உடற்பயிற்சி அவசியமானது.