சுமார் ஆறு கோடி ஈபிஎஃப் (EPF) சந்தாதாரர்களுக்கு நல்ல செய்தி. டிசம்பர் 31 (வியாழக்கிழமை) ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்குகளில் 2019-20 ஆம் ஆண்டிற்கான 8.5 சதவீத வட்டி விகிதத்தை ஈபிஎஃப்ஓ (EPFO) வரவு வைத்துள்ளது.
2019-20 ஆம் ஆண்டிற்கான EPFO வட்டி உங்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிட்டதா? PF கணக்கில் எவ்வளவு பணம் இருப்பு இருக்கிறது என்பதையும் சுலபமாக தெரிந்துக் கொள்ளும் வழிமுறைகள் உங்களுக்காக...
EPF சந்தாதாரர்கள் வீட்டில் இருந்தே தங்கள் கணக்கில் உள்ள இருப்புத்தொகையை நான்கு வெவ்வேறு வழிகளைப் பயன்படுத்தி சரிபார்க்கலாம்
கொரோனா வைரஸ் காலகட்டத்தில், பொருளாதாரம் மிகப்பெரிய பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதால், EPFO இந்த ஆண்டு வட்டித் தொகையை செலுத்துமா என்ற கேள்விகள் எழுந்தன. ஆனால் வட்டித்தொகை வரவு வைக்கப்பட்டது.
உமங் செயலி (UMANG app) மூலம் மிக எளிதாக கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டதை தெரிந்துக் கொள்ளலாம்.
UMANG app மூலம் EPF இருப்பை சரிபார்க்கும் முறை: பணியாளர் மைய சேவைகளில் (Employee Centric Services) சென்று பாஸ்புக் (View Passbook) தெரிவை தேர்ந்தெடுக்கவும். அதில் உங்கள் UAN எண்ணை உள்ளிடவும். பிறகு கடவுச்சொல்லை உள்ளிடவும். உங்கள் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணில் வந்திருக்கும் OTP ஐ உள்ளிடவும், இப்போது உங்கள் EPF கணக்கு இருப்பை தெரிந்துக் கொள்ளவும்
ஊழியர் சேமநல நிதி அல்லது ஊழியர் வருங்கால வைப்பு நிதி (Employees' Provident Fund) என்பது தொழிலாளர்களுக்கு அரசு வழங்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் ஒன்றாகும். அரசு நிறுவனங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் எதிர்கால நலன் கருதி தொழிலாளரின் மாதாந்த சம்பளத்தில் தொழில்தருநர் சார்பிலும் தொழிலாளர் சார்பிலும் பங்களிப்புச் செய்வதாகும். இந்தப்பங்களிப்புப்பணத்தை தொழிலாளர் ஓய்வு பெற்ற பின்னர் மீளப்பெற்றுக் கொள்ளலாம்.
இந்தியாவில் தொழிலாளர் சேமநல நிதி 1952 -ல் ஆரம்பிக்கப்பட்டது. 1971 முதல் ஓய்வூதியத் திட்டத்தையும் இதனோடு சேர்த்து இந்திய அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது .
தொழில் நிறுவனங்கள் அளிக்கும் 12 சதவிகிதத்தில் 8.33% தொழிலாளரின் குடும்ப ஓய்வூதியத்துக்காக எடுத்துக் கொள்ளப்படும். ஊழியர்களின் பங்கான 12%, தொழில் நிறுவனத்தின் பங்கான 3.5% (ஓய்வூதியத்துக்குக் கழித்தது போக) ஊழியர்களின் சேமநல நிதிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.