Hardik Pandya reaction : டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவை மும்பை ஏர்போர்ட்டில் பார்த்ததும் ஹர்திக் பாண்டியா கொடுத்த ரியாக்ஷன் வைரலாகியுள்ளது.
Hardik Pandya's Viral Reaction : ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் டி20 கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அந்த இடத்துக்கு சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்பட இருக்கிறார்.
ஹர்திக் பாண்டியாவுக்கு இப்போது நேரம் சரியில்லை. அவர் கிரிக்கெட் களத்தில் சிறப்பாக ஆடினாலும், அவருக்கு நடக்கும் விஷயங்கள் எல்லாம் எதிர்மறையாக தான் இருக்கிறது.
டி20 உலகக்கோப்பை 2024 தொடரில் மிகவும் சிறப்பாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா, இந்திய அணி சாம்பியன் கோப்பையை வெல்ல துருப்புச்சீட்டாக இருந்தார். ஆனால் வெற்றியோடு தாயகம் திரும்பியவருக்கு சோகமே காத்திருந்தது.
ஆம், அவர் தன்னுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக அறிவித்தார். மனைவி நடாஷாவை விவாகரத்து செய்வதாக அறிவித்த ஹர்திக் பாண்டியா, தங்களுடைய மகன் அகஸ்தியாவை இருவரும் கவனித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.
இது அவருக்கு மிகவும் கடினமான முடிவாக இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் இலக்கை கருத்தில் கொண்டு ஹர்திக் பாண்டியா, நடாஷா இருவரும் இந்த முடிவை எடுத்திருக்கின்றனர். விவாகரத்து அறிவிப்புக்குப் பிறகு நடாஷா செர்பியாகவுக்கே திரும்பி சென்றுவிட்டார்.
அவருடன் மகன் அகஸ்தியாவையும் அழைத்துச் சென்றுள்ளார் நடாஷா. ஹர்திக் பாண்டியா இப்போது இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்க சென்றிருப்பதால், அந்த தொடரை முடித்தபிறகு மகனை பார்க்க செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, இந்திய அணியின் டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார் ஹர்திக் பாண்டியா. அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் இந்திய அணியின் புதிய டி20 கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இருந்து அவர் முழுநேர கேப்டனாக செயல்பட இருக்கிறார்.
ஹர்திக் பாண்டியா நல்ல பிளேயர் என்றாலும், அவருடைய பிட்னஸ் கவலையளிப்பதாகவும், அதனால் அவரை டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதாகவும் அஜித் அகர்கர் மற்றும் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளனர்.
அதேநேரத்தில், ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியிலும் ஹர்திக் பாண்டியா சேர்க்கப்படவில்லை. இதுவரை டி20, ஒருநாள் போட்டிகளில் விளையாடி வந்த அவர், கவுதம் கம்பீர் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு ஹர்திக் பாண்டியா விஷயத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் பார்க்கும்போது, இந்திய அணியிலும் ஹர்திக் பாண்டியாவின் இடம் கேள்விக்குறியாகியுள்ளது என்றே சொல்லலாம். அவர் சிறப்பாக பேட்டிங் மற்றும் பந்தவீச்சில் செயல்படவில்லை என்றால் தொடர்ந்து அணியில் இருப்பாரா? என்பதே சந்தேகம் தான்.
ஹர்திக் தன்னுடைய பந்துவீச்சை முழுமையாக காண்பித்த பின்னரே அவர் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் சேர்க்கப்படுவது குறித்து பரிசீலிக்கப்படுவார் என கவுதம் கம்பீர் தெரிவித்திருக்கிறார். அதனால் மீண்டும் ஒருமுறை தன்னுடைய திறமை மற்றும் பிட்னஸை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இந்த சூழலில் தான் மும்பை ஏர்போர்ட்டில் இந்திய டி20 அணியின் புதிய கேப்டன் சூர்யகுமார் யாதவை ஹர்திக் பாண்டியா சந்தித்தார். அப்போது அவரை கட்டித் தழுவி மகிழ்ச்சியோடு வரவேற்று தன்னுடைய வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.