உணவு பொருட்களுக்கு காலாவதி தேதி இருப்பது போலவே, சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதிகள் உள்ளன. அவற்றை எப்படி கண்டுபிடிப்பது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
எல்பிஜி சிலிண்டர்கள் இந்தியாவில் உள்ள பெரும்பாலான வீடுகளில் பயன்பாட்டில் உள்ளன. இதன் விலை ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் மாற்றி அமைக்கப்படுகிறது.
ஒவ்வொரு முறை புதிய சிலிண்டர் வாங்கும் போதும் அதனை தூக்கி பார்த்து, எடை இருக்கிறதா என்பதை சரி பார்க்கிறோம். ஆனால் யாரும் அதன் காலாவதி தேதியை சரிபார்ப்பது இல்லை.
பெரிய விபத்துக்களையும், அசம்பாவிதங்களையும் தடுக்க காலாவதி தேதியை தெரிந்து கொள்வது அவசியம். சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி கண்டுபிடிப்பது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
ஒவ்வொரு சிலண்டரிலும் அதன் காலாவதி தேதி எழுதப்பட்டிருக்கும். அவை ஆங்கில எழுத்துக்கள் மற்றும் எண்களில் குறிப்பிடப்பட்டு இருக்கும். அதன் மூலம் சிலிண்டரின் காலாவதி தேதியை கண்டுபிடிக்கலாம்.
சிலிண்டரில் A26, B25, C30, D32 என்று குறிப்பிடப்பட்டு இருக்கும். A ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகியவற்றைக் குறிக்கிறது. B ஏப்ரல், மே, ஜூன் ஆகியவற்றைக் குறிக்கிறது. C ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகியவற்றைக் குறிக்கிறது. D அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகியவற்றைக் குறிக்கிறது.
எடுத்துக்காட்டாக ஒரு சிலிண்டரில் A26 என்று குறிப்பிட்டு இருந்தால், அந்த சிலிண்டர் மார்ச் 2026க்குள் காலாவதியாகிவிடும். சிலிண்டரில் D32 என்று குறிப்பிட்டு இருந்தால், அதனை டிசம்பர் 2032 வரை பயன்படுத்தி கொள்ளலாம். ஒரு சிலிண்டர் காலாவதியாக 15 ஆண்டுகள் ஆகும்.