Maha Kumbh Mela | 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கக்கூடிய மகா கும்பமேளா குறித்த முக்கிய அப்டேட் தெரிந்து கொள்ளுங்கள்.
மகா கும்பமேளா (Maha Kumbh Mela) குறித்த வரலாறு, முக்கியத்துவம், முக்கிய தேதிகள் குளிக்கும் நேரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா (Maha Kumbh Mela) ஜனவரி 13 ஆம் தேதி தொடங்க உள்ளது. சுமார் 144 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் இந்த கும்பமேளா வரலாற்று சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ் நகரில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி சங்கமிக்கும் இடத்தில் தான் கும்பமேளா நடக்கிறது. ஹரித்வார், உஜ்ஜைன் மற்றும் நாசிக் ஆகிய நகரங்களில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 26 ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த விழாவை சிறப்பாக நடத்த அனைத்து விதமான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
மகா கும்பம் என்பது நதிகள், கலாச்சாரம், ஆன்மீகம் மற்றும் மனிதநேயம் ஆகியவற்றின் சங்கமம். மகா கும்பமேளாவின் பிறப்பிடமாகக் கருதப்படும் சாகர் மந்தன் என்ற தெய்வீக நிகழ்வைப் பற்றி ரிக்வேதம் பேசுகிறது. புராணங்களின் படி, கடவுள்கள் (தேவர்கள்) மற்றும் அசுரர்கள் (அசுரர்கள்) அழியாமையின் அமிர்தத்தைப் பெறுவதற்காக மந்தாரா மலையைப் பயன்படுத்தி ஆதிகாலப் பெருங்கடலைக் கலக்கினர்.
அமிர்தத்தை சமமாகப் பகிர்ந்து கொள்வதாக உறுதியளித்து, இந்தப் பணிக்கு இந்தக் கடவுள்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே தற்காலிகப் போர் நிறுத்தம் தேவைப்பட்டது. இருப்பினும், இறுதியாக அம்ரித் தயாரிக்கப்பட்டபோது, அதனை பிரிப்பதில் ஒரு போர் ஏற்பட்டது. அமிர்தத்தை அசுரர்களிடம் இருந்து காக்க, மகாவிஷ்ணு, மோகினியின் வடிவில், அமிர்தம் அடங்கிய கலசத்தை (கும்பம்) தூக்கி எறிந்தார்.
அப்போது, அந்த கும்பத்தில் இருந்து சிந்திய நான்கு துளிகள் பூமியில் விழுந்தது. அந்த நான்கு துளிகளில் உருவான நகரங்கள் தான் ஹரித்வார், பிரயாக்ராஜ், உஜ்ஜைன் மற்றும் நாசிக் என்று அழைக்கப்படுகிறது. அதனாலேயே இந்த இடங்கள் வரலாற்று ரீதியாக புனிதமானதாக கருதப்படுகின்றன.
எனவே, இந்த மகா கும்பமேளாவில் என்னென்ன தேதிகளில் என்னென்ன சிறப்பு என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஜனவரி 13, 2025: பௌஷ் பூர்ணிமா, ஜனவரி 14, 2025: மகர சங்கராந்தி, ஜனவரி 29, 2025: மௌனி அமாவாசை, பிப்ரவரி 3, 2025: பசந்த் பஞ்சமி, பிப்ரவரி 12, 2025: மாகி பூர்ணிமா, பிப்ரவரி 26, 2025: மகாசிவராத்திரி ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடு நடக்கும்.
மொத்தம் 45 நாட்கள் மகா கும்பமேளா வெகு சிறப்பாக நடக்க இருக்கிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள இந்தியா முழுவதும் இருந்து உத்திரப்பிரதேசத்துக்கு மக்கள் செல்ல தொடங்கியுள்ளனர். மொத்தம் 40 கோடி பேர் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.