Rey Misterio Death | WWE ரே மிஸ்டீரியோ உயிரிழந்துவிட்டதாக ரசிகர்கள் கவலைப்படும் நிலையில், ரே மிஸ்டீரியோ சீனியர் தான் உயிரிழந்துள்ளார்.
WWE குத்துச் சண்டை உலகின் 90ஸ் கிட்ஸ் ஆதர்சன நாயகன் ரே மிஸ்டீரியோ (Rey Misterio) உயிரிழந்துவிட்டதாக வெளியான தகவல் உண்மையில்லை.
உலகம் முழுவதும் பிரபல பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக இருக்கும் WWE மல்யுத்த குத்துச் சண்டை போட்டியில் மிகவும் பிரபலமானவர் ரே மிஸ்டீரியோ (Rey Misterio). குள்ளமான உயரம், முகத்தை மறைத்த முகமூடியுடன் இருக்கும் அவர், மல்யுத்த ரிங்குக்குள் வந்துவிட்டால் எவ்வளவு பெரிய பைட்டர்களையும் அசால்டாக தன்னுடைய சண்டை யுக்தியில் கதிகலங்க வைத்துவிடுவார்.
6-1-9 என்ற பாடல் போட்டால் ரே மிஸ்டீரியோ வருகிறார் என ரசிகர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள். அந்த மியூசிக் தான் அவரின் என்ட்ரிக்கான அடையாளம். பிக்ஸோ, மார்க் ஹென்றி, கிரேட் காளி உள்ளிட்ட ஏராளமான, உருவத்தில் பெரிய, உடல் அமைப்பில் மிகப்பெரிய வீரர்களை எல்லாம் ரீ மிஸ்டீரியோ தோற்கடித்திருக்கிறார். குள்ளமான உயரம் என்பதை ஒரு குறையாக பார்க்காமல் அதனையே தனக்கான பலமாக மாற்றி மல்யுத்த ரிங்கில் சூப்பர் ஸ்டாராக வந்தவர் அவர்.
அதனாலேயே அவருக்கு இந்தியா உள்ளிட்ட உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். இப்படி இருக்கையில் இன்று ரே மிஸ்டீரியோ உயிரிழந்துவிட்டதாக செய்திகள் பரவியது. இது குத்துச் சண்டை ரசிகர்கள் மத்தியில்பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், எல்லோரும் ReyMisterio என்ற ஹேஸ்டேக்கை போட்டு அவருக்கு இரங்கல் தெரிவிக்க ஆரம்பித்தனர்.
ஆனால் உண்மையில் 90ஸ் கிட்ஸ் ஸ்டாரான ரே மிஸ்டீரீயோ இறக்கவில்லை. இறந்தது அவரது உறவினரான ரே மிஸ்டீரியோ சீனியர் (ReyMisterio Sr) தான். இவரும் பிரபலமான குத்துச்சண்டை வீரர்.
ரே மிஸ்டீரியோ சீனியர் பயிற்சியின் வழியாகவே ரே மிஸ்டீரியோ (ReyMisterio) WWE மல்யுத்த போட்டிகளுக்குள் என்ட்ரியானார். ரே மிஸ்டீரியோ சீனியர், ஜூனியர் இருவரும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி உடலமைப்புடன் உயரம் குறைவாக இருப்பதுடன் முகமூடி அணிந்து இருப்பார்கள் என்பதால் ரே மிஸ்டீரியோ ஜூனியர் உயிரிழந்துவிட்டார் என்று தகவல் பரவியது.
ஆனால், உண்மையில் உயிரிழந்தது ரே மிஸ்டீரியோ சீனியர். இவர் 70, 80 கால கட்டங்களில் மல்யுத்தத்தில் கலக்கியவர். இறந்த அவரின் வயது 66. தற்போது உயிரிழந்த ரே மிஸ்டீரியோ சீனியர் இயற்பெயர் மிகுவல் ஏஞ்சல் லோபஸ் டயஸ்.
ஆரம்பத்தில் மெக்ஸிகோவில் லூச்சா லிப்ரே போட்டிகள் மூலம் புகழ் பெற்ற ரே மிஸ்டீரியோ சீனியர், உலக சாம்பியன்ஷிப் மல்யுத்தத்தின் ‘ஸ்டார்கேட்’ போன்ற நிகழ்வுகள் உட்பட சர்வதேச அளவில் தனது திறமையை வெளிப்படுத்தி இந்த இடத்தைப் பிடித்தார்.
மல்யுத்த விளையாட்டில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்காக அறியப்பட்ட ரே மிஸ்டீரியோ சீனியர், உலகம் முழுவதும் உள்ள எண்ணற்ற ரசிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தினார். மெக்சிகன் மல்யுத்தத்தை இன்று உலகமே அறிந்திருப்பதில் ரே மிஸ்டீரியோ சீனியருக்கு மிகப்பெரிய பங்குண்டு. ரே மிஸ்டீரியோ சீனியர் மறைவு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு ஆழ்ந்த வருத்தத்துடன் இரங்கல் தெரிவித்தும் வருகின்றனர்.