அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக போடப்பட்ட வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வேன் என செந்தில் பாலாஜி பேட்டி
சிறையில் இருந்து வெளியே வந்ததும் பேட்டியளித்த செந்தில் பாலாஜி, முதலமைச்சருக்கு வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் செலுத்துவேன் என கூறியுள்ளார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜி சுமார் 471 நாட்கள் சிறையில் இருந்தார். அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் எல்லாம் தள்ளுபடி செய்யப்பட்டன.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் தொடர்ச்சியாக ஜாமீன் கேட்டு முறையிட்டு வந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்த சூழலில் செப்டம்பர் 26 ஆம் தேதியான இன்று உச்சநீதிமன்றம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் கூட ஜாமீன் கொடுத்தது.
இந்த உத்தரவு குறித்த விவரங்கள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதி ஜாமீன் உத்தரவில் சில விளக்கங்களை கேட்டார்.
அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞரும் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்காததால், செந்தில் பாலாஜியின் ஜாமீன் உத்தரவாதங்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஏற்றுக் கொண்டார்.
இதனையடுத்து இந்த விவரங்கள் உடனடியாக சென்னை புழல் சிறைக்கு இமெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு சிறைத்துறை நடவடிக்கைகள் எல்லாம் நிறைவடைந்து செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியே வந்தார்.
புழல் சிறையில் இருந்து வெளியே வந்த அவருக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அப்போது பேட்டியளித்த செந்தில் பாலாஜி, அரசியல் காழ்ப்புணர்ச்சியால் போடப்பட்ட வழக்கை சட்டரீதியாக எதிர்கொண்டு வெற்றி பெறுவேன் என கூறினார்.
மேலும், தனக்கு ஆதரவளித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன்பட்டவனாக இருப்பேன் என்றும் செந்தில் பாலாஜி தெரிவித்தார். இதனையடுத்து சென்னை மெரீனாவில் இருக்கும் கலைஞர் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.