உருக்கமுடன் ஓய்வை அறிவித்தார் வினேஷ் போகத்... வெள்ளிப் பதக்கம் கிடைக்க வாய்ப்பு? - இன்று தீர்ப்பு

Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட பின்னர், இந்திய வீராங்கனை வினேஷ் போகத் மல்யுத்த போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார்.

  • Aug 08, 2024, 09:06 AM IST

2016 ரியோ ஒலிம்பிக், 2021 டோக்கியோ ஒலிம்பிக், 2024 பாரிஸ் ஒலிம்பிக் என மூன்று ஒலிம்பிக் தொடரிலும் பங்கேற்றாலும் வினேஷ் போகத்தால் (Vinesh Phogat) கடைசி வரை பதக்கம் வெல்ல இயலவில்லை என்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.

 

 

1 /8

பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில், மகளிர் மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப்பிரிவில் வினேஷ் போகத் பங்கேற்றார். முதல் சுற்றில் இருந்து அதிரடியாக விளையாடி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற வினேஷ் போகத், அனுமதிக்கப்பட்டதை விட கூடுதலாக 100 கிராம் எடை இருந்ததால் ஒலிம்பிக் கமிட்டியால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.   

2 /8

தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் உறுதியான மகிழ்ச்சியில் இருந்து வினேஷிற்கும், இந்திய மக்களுக்கும் இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை அளித்தது. இறுதிப்போட்டி நேற்றிரவு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், போட்டிக்கு முந்தைய எடை பரிசோதனையில் 2 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார் வினேஷ் போகத். அன்றைய இரவு முழுவதும் சாப்பிடாமல், தூங்காமல் உடல் எடையை குறைத்து காலையில் வெறும் 100 கிராம் எடை கூடியதால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.   

3 /8

வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் அமெரிக்க வீராங்கனை சாரா ஹில்டெப்ராண்ட் உடன் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபஸ் விளையாடினார். இதில் அமெரிக்க வீராங்கனை 3-0 என்ற கணக்கில் தஙகம் வென்றார். கியூபா வீராங்கனைக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டது. இந்த கியூபா வீராங்கனையைதான் வினேஷ் போகத் அரையிறுதியில் அசால்ட்டாக வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.   

4 /8

தற்போது இறுதிப்போட்டி நிறைவடைந்தாலும், தனது தகுதிநீக்கத்திற்கு எதிராக வினேஷ் போகத் விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தை (CAS) நாடியுள்ளார். இதில் யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபஸ் உடன் வெள்ளிப் பதக்கத்தை பகிர்ந்துகொள்ள உத்தரவிடும்படி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விசாரணை இன்று காலை நடைபெறுகிறது.   

5 /8

இருப்பினும், இந்த சோகத்தை மறந்து 2028ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக் தொடரில் கவனம் செலுத்தும்படி பலரும் வினேஷ் போகத்திற்கு ஆறுதல் கூறிய நிலையில், இனி மல்யுத்த போட்டிகளில் விளையாடுவதில்லை என்ற ஓய்வறிப்பை இன்று அவர் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியும் அவருக்கு X பதிவின் மூலம் ஆறுதல் தெரிவித்திருந்தார்.   

6 /8

வினேஷ் போகத் இன்று அவரது X பதிவில்,"தாயே, என்னை மன்னியுங்கள். மல்யுத்தம் என்னை வென்றுவிட்டது, நான் தோற்றுவிட்டேன்.  உங்கள் கனவுகளும் என் தைரியமும் உடைந்துவிட்டது. இனியும் சண்டையிட எனக்கு சக்தி இல்லை" என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.  

7 /8

இந்நிலையில், வினேஷ் போகத் நாடு திரும்பும்போது, அவரை வெள்ளி பதக்கம் வென்றவராக கருதி அவருக்கு வரவேற்பு அளிக்கப்படும் என ஹரியானா அரசு அறிவித்துள்ளது. வினேஷ் போகத் ஹரியானாவை சேர்ந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.   

8 /8

அதுமட்டுமின்றி வெள்ளி வென்றவர்களுக்கு வழங்கப்படும் மரியாதை, வெகுமதிகள், சலுகைகள் ஆகியவை வினேஷ் போகத்திற்கும் வழங்கப்படும் என்றும் ஹரியானா அரசு அறிவித்திருக்கிறது.