ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில், பெரும் ஆரவாரத்துடன் நாளை உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் துவங்குகிறது!
கால்பந்து திருவிழாவை எதிர்நோக்கி பல்வேறு நாடுகளின் அணிகள் மற்றும் ரசிகர்கள் ரஷ்ய படையெடுத்துள்ளனர். இதனால் மாஸ்கோ நகரமே திருவிழாக் கோலம் பூண்டு காட்சியளிக்கின்றது.
32 நாடுகளின் அணிகள் கலந்துக் கொள்ளும் இந்த உலக கோப்பை தொடரில் நாளை துவங்கி ஜூலை மாதம் 15-ம் தேதி வரை 64 ஆட்டங்களாக நடைபெறுகிறது. இதற்காக 11 நகரங்களில் 12 மைதானங்கள் தேர்வுசெய்யப்பட்டு தயார்படுத்தப் பட்டுள்ளன.
முதல் போட்டியாக நாளை ரஷ்யா மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதுகின்றன. நாளை இரவு 8.30 மணியளவில் இந்த போட்டி துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டிகளை காண சுமார் ஒரு கோடி ரசிகர்கள் மாஸ்கோவில் திரண்டுள்ளனர். பாதுகாப்பு நலன் கருதி நகரெங்கிலும் 30 ஆயிரம் காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் 2026-ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்தும் வாய்ப்பு யாருக்கு என்று இன்று வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. 2022-ஆம் ஆண்டு கால்பந்து போட்டிகள் கத்தாரில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.