எந்த போட்டியும் இல்லை, ஊதியமும் இல்லை: ஐபிஎல் ரத்து செய்யப்பட்டால் வீரர்கள் பாதிக்கப்படுவார்கள்

உண்மையில், ஐபிஎல் ரத்து செய்யப்படும் என்ற நிலை உருவானால், வீரர்களுக்கு பொருளாதார தாக்கங்கள் மிகப்பெரியதாக இருக்கும் என்று இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் தலைவர் அசோக் மல்ஹோத்ரா ஒப்புக் கொண்டார்.

Shiva Murugesan சிவா முருகேசன் | Updated: Mar 31, 2020, 07:19 PM IST
எந்த போட்டியும் இல்லை, ஊதியமும் இல்லை: ஐபிஎல் ரத்து செய்யப்பட்டால் வீரர்கள் பாதிக்கப்படுவார்கள்
Photo: PTI

போட்டி இல்லை, ஊதியம் இல்லை: இந்த ஆண்டின் ஐ.பி.எல். தொடரில் பதிவுசெய்த வீரர்களின் தலைவிதியாக இதுவாக இருக்கக்கூடும். தற்போது ஐபிஎல் (IPL) ஒத்திவைக்கப்பட்டு உள்ளது மற்றும் பி.சி.சி.ஐ இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஐபிஎல் தொடர் குறித்து ஒரு மாற்று ஏற்பாடு செய்யவிட்டால், IPL 2020 தொடர் நடத்த வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

"ஐபிஎல் கொடுப்பனவு முறை என்னவென்றால், போட்டி தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு 15 சதவீதம் அவர்களின் ஒப்பந்த பணத்தில் செலுத்தப்படுகிறது. பிறகு போட்டி நடக்கும் போது 65 சதவீதம் செலுத்தப்படுகிறது. மீதமுள்ள 20 சதவிகிதம் போட்டி முடிந்ததும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் செலுத்தப்படுகிறது” என்று ஐபிஎல் உரிமையின் மூத்த அதிகாரி ஒருவர் பி.டி.ஐ. செய்தி ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

“பிசிசிஐ குறிப்பிட்ட வழிகாட்டுதல்களைக் கொண்டுள்ளது. வெளிப்படையாக கூறுவது என்றால், இப்போது வரை எந்த வீரருக்கும் பணம் வழங்கப்படவில்லை” என்று அவர் மேலும் கூறினார்.

உண்மையில், ஐபிஎல் ரத்து செய்யப்படும் என்ற நிலை உருவானால், வீரர்களுக்கு பொருளாதார தாக்கங்கள் மிகப்பெரியதாக இருக்கும் என்று இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் தலைவர் அசோக் மல்ஹோத்ரா ஒப்புக் கொண்டார்.

COVID-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக நடந்துகொண்டிருக்கும் ஊரடங்கு உத்தரவுக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான கோடி இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. அத்தகைய சூழ்நிலையில் உள்நாட்டு வீரர்கள் கூட ஊதியக் குறைப்புகளை ஏற்க வேண்டியிருக்கும் என்ற நிலை வரலாம் என்று அவர் கருதுகிறார்.

இப்போது, ​​பி.சி.சி.ஐ மீண்டும் ஒரு மாற்று ஐ.பி.எல் போட்டி அட்டவணையை மே மாதத்தில் அறிவிக்க வாய்ப்புகள் குறைவாகத் தெரிகின்றன. ஆனால் இதுக்குறித்து உறுதியான எந்த செய்தியும் வெளிவரவில்லை.

தற்போது நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை, 21 நாள்கள் லாக்-டவுனில் உள்ளது. ஐபிஎல் ஏப்ரல் 15 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தொற்றுநோய் உலகளவில் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது, இதுவரை 37,000 பேர் கொல்லப்பட்டனர்.

இதனால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவின் வீரர்கள் சம்பளக் குறைப்புக்கு ஒப்புக் கொள்ள வழிவகுத்துள்ளது.

பிசிசிஐ வீரர்களுக்கு அளிக்கும் பணத்தை கிரிக்கெட்டிலிருந்து சம்பாதிக்கிறது. கிரிக்கெட் நடக்கவில்லை என்றால், பணம் எங்கிருந்து வரும்? எனவே வீரர்கள் சூழ்நிலையை புரிந்துக்கொண்டு விவேகமானவர்களாக இருக்க வேண்டும்.

எனவே, இதில் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்ல, உள்நாட்டு வீரர்களும் பாதிக்கப்படுவார்கள். இது குழுவின் தவறு அல்ல. இது தவிர்க்க முடியாத சூழ்நிலை என்று மல்ஹோத்ரா கூறினார்.