#MeToo என்ற ஹேஷ்டேக் மிக வேகமாக இந்தியாவில் பரவி வருகிறது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஹாலிவுட்டில் தொடங்கிய இந்த ஹேஷ்டேக், தற்போது சில தினங்களாக இந்தியாவில் பெரும் புயலை கிளப்பி வருகிறது. இதில் பெண்கள் தங்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறலில் குறித்து புகார்களைக் கொடுத்து வருகிறார்.
இந்த புகாரில் விளையாட்டு துறையும் சிக்கியுள்ளது. குறிப்பாக கிரிக்கெட் விளையாட்டில் இலங்கை அணியின் முன்னால் கேப்டன் அர்ஜூன ரணதுங்கா, மற்றும் மலிங்காவுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் வெளிவந்தன. பின்னர் பிசிசிஐ அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் ஜோகரி மீதும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதனையடுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ராகுல் ஜோகரிடம் குற்றச்சாட்டு குறித்து ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என கேட்டுள்ளது.
மேலும் இலங்கை கிரிக்கேட் வாரியத்தின் தேர்வு குழுவில் முக்கிய பொருப்பில் இருக்கும் சனாத் ஜெயசூர்யா ICC சட்டவிதிகளின் இரண்டு விதிகளை மீறியதாக, அவர் மீது குற்றச்சாட்டடு கூறப்பட்டுள்ளது. இதுக்குறித்து சனாத் ஜெயசூர்யாவிடம் ICC விளக்கம் கோரியுள்ளது.
இந்நிலையில், நாளை மற்றும் நாளை மறுநாள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் சிங்கப்பூரில் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் தலைமை நிர்வாக அதிகாரிகள் கலந்துக் கொள்கின்றனர். இதில் கிரிக்கெட் வீரர்கள், நடுவர்கள், பயிர்ச்சியாளர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் உட்பட யாராவது பாலியல் குற்றச்சாட்டு மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டால் அவர்களை தடை செய்ய வசதியாக புதிய தீர்மானம் கொண்டு வருவது குறித்து ஆலோசனை செய்யப்படும் எனத் தெரிகிறது.
புதிய தீர்மானம் கொண்டுவரப்பட்டால், பிசிசிஐ அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் ஜோகரி தடை செய்யப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் நடைபெற உள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் ராகுல் ஜோகரி பங்கேற்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.