U19 உலக கோப்பை தொடரின் சூப்பர் லீக் காலிறுதி போட்டியில் இந்தியா அணி, ஆஸ்திரேலிய அணியை 74 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
தென்னாப்பிரிக்காவில் நடைப்பெற்று வரும் U19 உலக கோப்பை தொடரின் சூப்பர் லீக் காலிறுதி போட்டி 1-ல் இந்தியா மற்றும் ஆஸ்திரேலயா அணிகள் இன்று மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடியது.
இதனையடுத்து முதலாவதாக களமிறங்கிய இந்திய வீரர்கள் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்தனர். துவக்க ஆட்டக்காரர் யஷ்வஸ்வி ஜெய்ஷ்வால் அணியில் அதிகப்பட்சமாக 62(82) ரன்கள் குவித்தார். இவருக்கு அடுத்தப்படியாக அதர்வா இறுதி வரை ஆட்டமிழக்காமல் 55*(54) ரன்கள் குவித்தார். இதனையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் குவித்தது.
ஆஸ்திரேலியா அணி தரப்பில், கோரி கெல்லி மற்றும் டூத் முர்ப்பி தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனையடுத்து 243 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது.
துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சாம் பென்னிங் அதிரடியாக விளையாடி 75(127) ரன்கள் குவித்தார். எனினும் மறுமுனையில் களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்ப ஆட்டத்தின் 43.3-வது ஓவரில் ஆஸ்திரேலியா அணி 159 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா தரப்பில் கார்த்திக் தியாகி 4 விக்கெட் வீழ்த்தினார். ஆகாஷ் சிங் 3 விக்கெட் வீழ்த்தினார். இதனையடுத்து 74 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.