மான்செஸ்டர்: 2019 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 34-வது லீக் ஆட்டம் மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இப்போட்டியில் நடப்பு தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்காத இந்திய அணியும் கிட்டத்தட்ட அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணிகளும் மோத உள்ளன. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்க உள்ளது.
அதற்கு முன்பு இதுவரை மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்திய அணிகள் உலகக் கோப்பையில் எத்தனை முறை மோதி உள்ளன. அதன் முடிவுகள் என்ன என்று பார்ப்போம்.
இவ்விறு அணிகளும் உலகக் கோப்பையில் இதுவரை 8 முறை மோதியுள்ளன. அதில் இந்தியா 5 முறையும், வெஸ்ட் இண்டீஸ் அணி 3 முறையும் வெற்றிப் பெற்றுள்ளது.
1979 ஆம் ஆண்டு எஸ்.வெங்கட்ராகவன் தலைமையிலான இந்தியா அணி உலகக் கோப்பையில் பங்கேற்றது. அப்பொழுது தான் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் முதன் முதலில் மோதின. அந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிப்பெற்றது. மேலும் அந்த உலகக் கோப்பையும் வெஸ்ட் இண்டீஸ் அணி வென்றது.
1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் கபில் தேவ் தலைமையிலான இந்தியா அணி பங்கேற்றது. அந்த தொடரில் இரண்டு முறை மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இந்தியா மோதியது. அதாவது லீக் ஆட்டத்திலும், இறுதிப் போட்டியிலும் மோதியது. இரண்டு முறையும் இந்தியா வெற்றிப் பெற்றது. அந்த ஆண்டு தான் முதன் முதலில் கபில் தேவ் தலைமையிலான இந்தியா அணி உலகக் கோப்பையை வென்றது.
1992 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் போட்டியில் முகமது அசாருதீன் தலைமையிலான இந்தியா அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதியது. அதில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிப்பெற்றது. உலகக் கோப்பையில் இந்தியாவை வீழ்த்தியது இதுவே கடைசி முறையாகும்.
அதன் பின்பு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியே வென்றுள்ளது. அதாவது 1996, 2011, 2015 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் உடனான மோதலில் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது.