இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குனத்திலகா, டெஸ்ட் தொடரில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்!
நார்வே பெண்மனி தொடுத்துள்ள பாலியல் புகாரின் அடிப்படையில் இலங்கை வீரர் குனத்திலகா(27) டெஸ்ட் தொடரில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
தற்போது தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருபவர் தனுஷ்கா குனத்திலகா. சமீபத்தில் இவர் தனது நண்பருடன் இணைந்து இரண்டு நார்வே நாட்டுப் பெண்களை விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புனர்சிக்கு ஆளாக்கியதாக பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
குனத்திலகாவுடன் விடுதிக்கு சென்ற நண்பர் நார்வே நாட்டு குடியுரிமைப் பெற்ற இலங்கை வம்சாவழி நபர் என தெரிகிறது. எனினும் அவரது பெயரை இதுவரை காவல்துறையினர் வெளியிடவில்லை.
இலங்கை கிரிக்கெட் வாரியம் சட்டத்தின்படி வீரர்கள் தங்கள் சுற்றுப்பயணத்தின் போது நல்லிரவுக்கு முன்னதாக தாங்கள் தங்கியிருக்கும் விடுதிக்குள் வந்துவிட வேண்டும், மேலும் அவர்களது அறையில் விருந்தினர்களை அனுமதிக்க இயலாது. இதன் காரணமாக இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் விதிகளை மீறிவிட்டதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது குற்றம்சாட்டப்பட்டுள்ள குனத்திலகா டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், நடப்பு டெஸ்ட் தொடருக்கான சம்பளத்தினையும் வழக்கு முடியும் வரை பிடித்தமாக வைத்துள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.