சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி நேர் செட்டில் ராம்குமாரை தோற்கடித்தார். மற்றொரு இந்திய வீரர் மைனெனி ரஷியாவின் மிகைல் யூஸ்னியிடம் வீழ்ந்தார்.
22-வது ஏர்செல் சென்னை ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 2-வது நாளான நேற்று ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர்கள் ராம்குமாரும், யுகிபாம்ப்ரியும் மோதினர்.
ராம்குமாரின் மூன்று சர்வீஸ்களை முறியடித்து முதல் செட்டை எளிதில் வசப்படுத்திய யுகி பாம்ப்ரி 2-வது செட்டிலும் மளமளவென 5-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார்.
52 நிமிடத்திற்குள் ராம்குமாரின் சவாலை முடிவுக்கு கொண்டு வந்த தகுதி நிலை வீரரான யுகி பாம்ப்ரி 6-1, 6-1 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
வெற்றி பெற்றாலும் நான் இன்னும் நிறைய பகுதிகளில் முன்னேற்றம் காண வேண்டி இருக்கிறது. இனி டாப்-50 இடத்திற்குள் உள்ள வீரர்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. அதனால் போட்டி கடுமையாக இருக்கும் என்று யுகி பாம்ப்ரி குறிப்பிட்டார்.
இன்னொரு ஆட்டத்தில் பிரான்சின் பெனோய்ட் பேர், ரஷியாவின் கிராவ்சக்கை எதிர்கொண்டார். இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெனோய்ட் பேர் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் கிராவ்சக்கை தோற்கடித்தார். பெனோய்ட் பேர் அடுத்து யுகி பாம்ப்ரியை எதிர்கொள்கிறார்.