தமிழக சட்டசபை கூட்டத் தொடர் கடந்த வாரம் 8-ந் தேதி தொடங்கியது. அன்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எம்.எல்.ஏ.க்கள் பலர் உரையாற்றினர். எம்.எல்.ஏ.க்களின் விவாதத்துக்கு 12-ந் தேதியன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துப் பேசினார். பின்னர், சட்டசபை மீண்டும் கூடும் நாள் குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது.
இந்த நிலையில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) அடுத்த மாதம் பிப்ரவரி 1-ந் தேதியன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. மத்திய நிதித்துறை மந்திரி அருண் ஜெட்லி அந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
பொதுவாக மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு 15 நாட்களுக்கு மேல் தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
அந்த வகையில் பிப்ரவரி 3-ம் வாரத்திற்குப் பிறகு சட்டசபையில் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. ஒருவேளை தாமதம் ஏற்பட்டால் மார்ச் முதல் வாரத்தில் பட்ஜெட் தாக்கல் ஆக வாய்ப்பு உள்ளது என்றும் தெரிகிறது. ஆனால் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதி பற்றிய எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை அரசு மேற்கொள்ளவில்லை என்று சட்டசபை வட்டாரம் தெரிவித்தது.