காவல்துறை வாகனங்களில் அதிமுக-வின் பண மூட்டைகள்?

தேர்தல் பரபரப்பு நாடுமுழுவதும் நிலவி வரும் நிலையில் தமிழகத்தை ஆளும் அதிமுக கட்சியினர் காவல்துறை வாகனங்களில் வைத்து பண மூட்டைகளை கைமாற்றுவதாக திமுக குற்றம்சாட்டியுள்ளது.

Last Updated : Apr 4, 2019, 07:06 PM IST
காவல்துறை வாகனங்களில் அதிமுக-வின் பண மூட்டைகள்? title=

தேர்தல் பரபரப்பு நாடுமுழுவதும் நிலவி வரும் நிலையில் தமிழகத்தை ஆளும் அதிமுக கட்சியினர் காவல்துறை வாகனங்களில் வைத்து பண மூட்டைகளை கைமாற்றுவதாக திமுக குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக இன்று திமுக கழக தொண்டர்களுக்கும், கூட்டணி கட்சி தொண்டர்களுக்கும் திமுக தலைமை கழகம் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இன்று திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்படப்பட்டுள்ளதாவது...

"ஏதோ ஆளும் கட்சிகளான பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் எல்லாம் உத்தமபுத்திரர்கள், ஒழுக்க சீலர்கள் என வாக்காளர்கள் நம்ப வேண்டும் என்பதற்காக; மத்திய வருமான வரித்துறை ஏவப்பட்டு, தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை மட்டும் குறி வைத்து, பணம் கைப்பற்றப்பட்டதாகச் சித்தரித்து, வாக்காளர்களைத் திசை திருப்பவும் குழப்பம் ஏற்படுத்தவும், தேர்தலையே ரத்து செய்யவும், சதித் திட்டம் தீட்டப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.

அதேநேரத்தில் அ.தி.மு.க.வின் கோடி கோடியான பண மூட்டைகள், காவல்துறையின் வாகனங்களிலேயே, குறிப்பாக “இன்ட்டெலிஜென்ஸ்” துறையின் வாகனங்களிலேயே எடுத்துச் சென்று, காவல்துறையின் துணையுடனும் கண்காணிப்பிலும் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருக்கிறார்கள். குட்கா ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் காவல்துறைத் தலைவர் திரு.டி.கே.இராஜேந்திரன் அவர்களின் அனுமதியோடும் அவர் அளிக்கும் ஊக்கத்தோடும், சட்டவிரோதமான மோசடியான இந்த வேலை ஜரூராக நடைபெறுகிறது. இந்தத் தகவல் நம்பகத்தன்மையுள்ள சில காவல்துறை அதிகாரிகளிடமிருந்தே வந்திருக்கிறது. இதைத் தி.மு.க. கூட்டணி வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது.

எனவே, தி.மு.க. கூட்டணித் தோழர்கள், சந்தேகத்திற்கு இடம் தரும் வகையில் சாலைகளில் செல்லும் காவல்துறை வாகனங்கள் குறித்த தகவலை அவ்வப்போது உடனுக்குடன், தேர்தல் அலுவலர்களுக்கும் தேர்தல் பார்வையாளர்களுக்கும் தெரிவித்து, அந்த வாகனங்களைச் சோதனையிடக் கேட்டுக் கொண்டு வலியுறுத்த வேண்டும்.  அந்த வேண்டுகோள் உரிய முறையில் தேவையான நேரவரையறைக்குள் ஏற்கப்படவில்லை என்றால், பொதுமக்களைத் திரட்டி, பொது அமைதிக்கும்  - பொதுப் போக்குவரத்துக்கும் எவ்வித இடையூறும் இன்றி, குறுகியநேர ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்.  அதன் மூலம்;  வாக்குகளுக்கு லஞ்சம் தர காவல்துறை வாகனங்களிலேயே பணம் கொண்டு செல்லும் இந்த ஜனநாயக விரோத, சட்டவிரோத, தேசவிரோத, சுதந்திரமான - நியாயமான தேர்தலுக்கு முற்றிலும் எதிரான, மோசடித்தனத்தை வாக்காளர்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கூட்டணித் தோழர்கள் இரவும் பகலும் மிகுந்த கண்காணிப்புடன் இருந்து, தேர்தல் பணியில் எவ்விதத் தொய்வும் ஏற்பட்டு விடாமல், உறுதியுடனும் நம்பிக்கையுடனும் செயலாற்றிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், லாப நோக்கத்தோடும் தேர்தல் மோசடிகளுக்குத் துணைபோகும் அதிகாரிகள் காலம் தரும் கடும் தண்டனையிலிருந்து நிச்சயம் தப்ப முடியாது என்றும் எச்சரிக்கை செய்திட விரும்புகிறோம்!" என குறிப்பிட்டுள்ளார்.

Trending News