திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் பெற வேண்டி திமுக தொண்டர்கள் மொட்டை அடித்து வேண்டுதல் நடத்தினர்.
வயது முதிர்வு மற்றும் உடல் நிலை சோர்வு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த சில மாதங்களாக மருத்துவ கண்கானிப்பில் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜூலை 27-ஆம் நாள் இரவு அவருக்கு ரத்த அழுத்தக் குறைவு ஏற்பட்டதால் நள்ளிரவில் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப் பட்டு தலைவர் கருணாநிதி அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனையடுத்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின், அழகிரி, ராஜாத்தி அம்மாள், கனிமொழி மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பலரும் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்தனர்.
Visuals of heavy security outside Kauvery Hospital in Chennai where DMK Chief M Karunanidhi is undergoing treatment. pic.twitter.com/6wQYmeEmlZ
— ANI (@ANI) July 30, 2018
காவிரி மருத்துவமனையில் மருத்துவ கண்கானிப்பில் இருக்கும் திமுக தலைவர் கருணாநிதி அவர்களை தலைவர்கள் பலரும் சந்தித்து வருகின்றனர். தலைவர்கள் பொதுமக்கள் என பலரும் கருணாநிதி உடல் நலம்பெற வேண்டும் என பிராத்தனை செய்து வருகின்றனர். மேலும் அவரின் உடல் நலம் குறித்து அறிந்துக் கொள்ள தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனை பகுதியில் குவிந்து வருகிறார்கள். இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சுமார் 1.20 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் 6 ஆயிரம் ஆயுதப்படை போலீசார் உட்பட சுமார் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தலைவர் கருணாநிதிக்கு எதிர்பாராதவிதமாக தற்காலிக பின்னடைவு ஏற்பட்டது. ஆனால் தற்போது உடல்நிலை சீராக உள்ளது என மத்திய முன்னால் அமைச்சர் ஏ. ராஜா கூறியிருந்தார்.
மேலும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டார் அதில், காவேரி மருத்துவமனை அளித்த அறிக்கையின் படி, தலைவர் கலைஞர் அவர்களின் உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டாலும், தற்போது தலைவர் நலமாக, தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார். ஆகவே, கழகத் தோழர்கள் பொதுமக்களுக்கு இடையூறு அளிக்காமல், அமைதி காக்க வேண்டுகிறேன் என கூறியுள்ளார்.
இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி நலம்பெற வேண்டி பல இடங்களில் பூஜை நடந்து வருகிறது. தற்போது இன்று திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் பெற வேண்டி திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனை முன்பு மொட்டை அடித்து வேண்டுதல் நடத்தி வருகிறார்கள்.