ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் பாமக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் ஆண்டு தோறும் புத்தாண்டு தினத்தையொட்டி பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான புத்தாண்டு சிறப்பு பாமக பொதுக்குழு கூட்டம் திண்டிவனம் அருகே ஓமந்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடந்தது.
இந்த கூட்டத்தில், முன்னாள் மத்திய மந்திரிகள் வேலு, ஏ.கே. மூர்த்தி, மாநில நிர்வாகிகள் தீரன், ஏழுமலை, சுப்பராயலு, செல்வகுமார், முன்னாள் எம்.பி. தன்ராஜ், வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழி, மாவட்ட செயலாளர் சம்பத் மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. திரமானங்களின் முழு விவரம் கீழே.,
தீர்மானம் 1 : ஈழத்தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும்
நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. தமிழ்நாட்டில் வாழும் ஈழத்தமிழர்கள் அனைத்து வசதிகளுடன் கல்வி மற்றும் வேலைவாய்ப்புரிமை பெற்று கண்ணியத்துடன் வாழ வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும்.
ஈழத்தமிழர்களைப் பொருத்தவரை இந்தியாவில் குடியுரிமை பெற்று விட்டால், அதன்பின்னர் ஈழத்திற்கு திரும்ப முடியாது; தங்களின் தாயகமான ஈழத்தை நிரந்தரமாக இழந்து விடுவோம் என அஞ்சுகின்றனர். அதனால் தான் ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளுக்கு சென்றவர்களில் பெரும்பான்மையானோர் இன்னும் குடியுரிமை பெறாமல் வசிக்கின்றனர். அதேநேரத்தில் என்றாவது ஒரு நாள் தாயகம் திரும்ப இயலும் என்று நினைக்கும் ஈழத்தமிழர்கள், அதுவரை தமிழகத்தில் தாங்கள் கண்ணியமாக வாழ்வதற்கு ஏற்ற வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்று கோருகின்றனர். அதனால் தான் ஈழத்தமிழர்களை பொறுத்தவரை அவர்களுக்கு எத்தகைய குடியுரிமை வேண்டும் என்பதை, அவர்களின் விருப்பம் அறிந்து அதற்கேற்றவாறு தீர்மானிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது.
ஈழத்தமிழர்கள் தங்களின் சொந்த நாட்டு குடியுரிமையை இழக்காமல் தமிழகத்தில் கண்ணியத்துடனும், மதிப்புடனும் வாழ்வதை உறுதி செய்ய சிறந்த வழி அவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவது தான். இலங்கையைச் சேர்ந்தவர்கள் இன்னொரு நாட்டில் குடியுரிமை பெற்றால் அவர்களின் இலங்கை குடியுரிமை தானாக ரத்தாகி விடும். அதே நேரத்தில் இதுதொடர்பாக இலங்கையுடன் இருதரப்பு ஒப்பந்தம் செய்து கொள்ளும் நாடுகள் இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க முடியும். இலங்கை அதிபராக உள்ள கோத்தபாய இரஜபக்சே கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை இலங்கையிலும், அமெரிக்காவிலும் குடியுரிமை பெற்று அமெரிக்காவில் வாழ்ந்து வந்தார். இப்போது அமெரிக்கக் குடியுரிமையை ரத்து செய்து விட்டு இலங்கை அதிபர் ஆகியிருக்கிறார். அதேபோல், ஈழத்தமிழர்களும் இந்தியா மற்றும் இலங்கையில் விருப்பத்திற்கேற்ப வாழ வகை செய்ய முடியும்.
அதற்கு வசதியாக, இலங்கை அரசுடன் இருதரப்பு ஒப்பந்தம் செய்து கொண்டு, ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவில் இரட்டைக் குடியுரிமை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 2 : தமிழகத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை செயல்படுத்தக்கூடாது!
உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி அஸ்ஸாம் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு (National Register of Citizens -NRC) திட்டம் இந்தியா முழுவதும் நீட்டிக்கப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தியா முழுவதும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டை (National Population Register -NPR) மேம்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பதே தேசிய குடிமக்கள் பதிவேட்டை தயாரிப்பதற்கான முன்னோட்டம் தான் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக மக்கள் மத்தியில் நிலவும் ஐயங்கள் அனைத்தும் போக்கப்பட வேண்டும்.
தமிழ்நாடு பிற நாடுகளுடன் நில எல்லையை பகிர்ந்து கொள்ளும் மாநிலம் அல்ல. அதனால் பிறநாட்டு மக்கள் தமிழ்நாட்டுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவும் வாய்ப்பு இல்லை. இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்த ஈழத்தமிழர்கள் அனைவரின் விவரங்களும் அரசிடம் உள்ளன. இதனால், தமிழ்நாட்டில் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை செயல்படுத்துவதற்கான தேவை இல்லை. அதுமட்டுமின்றி, தமிழகத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை தயாரித்தால் அது தமிழக மக்களிடம் தேவையற்ற அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தும். எனவே, தமிழ்நாட்டில் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தக்கூடாது என்று இக்கூட்டம் கோருகிறது.
தீர்மானம் 3 : தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டும்; அதற்காக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்!
இந்தியா முழுவதும் சமூகநீதி குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. தேசிய அளவில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன. அதையேற்று சத்தீஸ்கர் மாநிலத்தில் பிற பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 14 விழுக்காட்டிலிருந்து 27% ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனால் அம்மாநிலத்தில் மொத்த இடஒதுக்கீட்டின் அளவு வேறெங்கும் இல்லாத அளவுக்கு 82 விழுக்காடு ஆக உயர்ந்துள்ளது. மராட்டியம், ஹரியானாவிலும் தமிழகத்தை விட அதிகமாக முறையே 78%, 70% இட ஒதுக்கீடு உள்ளது.
தமிழ்நாட்டிலும் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, அதனடிப்படையில் இடஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறது. அதற்கு செயல்வடிவம் கொடுப்பதற்கான நேரம் இப்போது வந்துவிட்டது. தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டின் அளவை தீர்மானிக்க சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும்படி உச்சநீதிமன்றமும் ஏற்கனவே ஆணையிட்டிருக்கிறது. ஆகவே, உச்சநீதிமன்ற அறிவுறுத்தலை நிறைவேற்றும்படியும், சமூக நீதியை வலுப்படுத்தும் வகையிலும் தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி அதன்படி இடஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்கும்படி மாநில அரசை பா.ம.க. சிறப்பு பொதுக்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 4 : மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீடு தேவை
இந்தியாவில் மாநில அரசுகளுக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களில் 15 விழுக்காடும், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களில் 50 விழுக்காடும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. இந்த இடங்கள் அனைத்தும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குனர் அலுவலகத்தால் நிரப்பப்படுகிறது. இந்த இடங்களில் பட்டியலினத்தவர், பழங்குடியினர், உயர்வகுப்பு ஏழைகள் ஆகியோருக்கு முறையே 15%, 7.5%, 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் நிலையில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் மட்டும் 27% இடஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. இது பெரும் அநீதி.
தமிழ்நாட்டிலிருந்து அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளிலேயே இருந்திருந்தால் 69% இடஒதுக்கீட்டின் அடிப்படையில் இடங்கள் நிரப்பப்பட்டிருக்கும். அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் குறைந்தபட்சம் மத்திய அரசின் 59.5% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பப்பட்டு, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்க வேண்டும். மத்திய அரசு கல்வி நிறுவனங்களின் இந்த ஒதுக்கீடு வழங்கப்படும் நிலையில் தேசிய ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டும் இந்த ஒதுக்கீடு மறுக்கப்படுவது நியாயமற்றது.
இதுதொடர்பாக மத்திய அரசுக்கு மருத்துவர் அய்யா அவர்களும், மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களும் பலமுறை கடிதம் எழுதியும் எந்த பயனும் இல்லாதது மிகவும் வருத்தமளிக்கிறது. எனவே, இந்த விஷயத்தில் பிரதமர் அவர்கள் உடனடியாக தலையிட்டு, அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க ஆணையிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 5 : காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்!
தமிழ்நாட்டின் முக்கிய பாசன ஆதாரமாக திகழ்வது காவிரி ஆறு ஆகும். தமிழகத்தின் 14 மாவட்டங்களில் சுமார் 30 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன ஆதாரமாகவும், 20 மாவட்டங்களைச் சேர்ந்த 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் காவிரி ஆறு திகழ்கிறது.ஆனால், பருவமழை சரியாக பெய்யாததாலும், கர்நாடகத்துடனான காவிரி சிக்கல் காரணமாகவும் காவிரியில் தண்ணீர் வருவது கணிக்க முடியாததாக உள்ளது. குறித்த காலத்தில் காவிரியில் தண்ணீர் வராததால் காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த 8 ஆண்டுகளில் ஒருமுறை கூட குறுவை சாகுபடி செய்யப் படவில்லை. இதனால் காவிரி பாசன மாவட்டங்களின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடன் சுமையை தாங்கிக் கொள்ள முடியாமல் உழவர்கள் தற்கொலை செய்வது வாடிக்கையாகிவிட்டது.
காவிரி ஆற்றை வற்றாத ஜீவநதியாக மாற்றுவதற்கு சிறந்த வழி கோதாவரி -காவிரி இணைப்பு ஆகும். கோதாவரி ஆற்றில் ஒவ்வொரு ஆண்டும் 1100 டி.எம்.சி. நீர் வீணாக கடலில் கலக்கும் நிலையில், அதில் ஒரு பகுதியை காவிரியில் திருப்புவதன் மூலம் காவிரி பாசன மாவட்டங்களை மீண்டும் வளம் கொழிக்கும் பகுதியாக மாற்ற முடியும். காவிரியில் வரும் கோதாவரி நீரை குண்டாறு திட்டத்துடன் இணைப்பதன் மூலம் தென் மாவட்டங்களும் பயனடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் நேரில் வலியுறுத்திய பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களுக்கும், பிரதமரிடமும், நாடாளுமன்ற இரு அவைகளிலும் இந்தத் திட்டத்தை வலியுறுத்தி வரும் பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கும் பா.ம.க. பொதுக்குழு நன்றி தெரிவித்துக் கொள்கிறது. மிகவும் அற்புதமான இத்திட்டத்தை வரும் 2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய பொது நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பதுடன், அதற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்யும்படியும் பா.ம.க. பொதுக்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 6 : தமிழ்நாட்டில் ரூ. 1 லட்சம் கோடியில் நீர்ப்பாசனப் பெருந்திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்க வேண்டும்!
தமிழ்நாடு இயல்பாகவே தண்ணீர் பற்றாக்குறை உள்ள மாநிலமாகும். தமிழகத்தில் ஓடும் நதிகளில் தாமிரபரணியைத் தவிர மற்ற ஆறுகளின் தண்ணீருக்காக பிற மாநிலங்களைத் தான் நம்பியிருக்க வேண்டியுள்ளது. இத்தகைய சூழலில் பாசனத் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் தான் வேளாண்மையை சிறப்பாக செய்ய முடியும். ஆனால், இந்தியாவிலேயே போதிய அளவில் நீர்ப்பாசனக் கட்டமைப்புகள் குறைவாக உள்ள மாநிலம் தமிழ்நாடு என்பது தான் கவலையளிக்கும் உண்மையாகும்.
பாசனக் கட்டமைப்புகளில் தமிழகத்தை விட மிகவும் மோசமான நிலையில் இருந்த ஆந்திரம், மத்தியப் பிரதேசம், இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கடந்த சில ஆண்டுகளில் வியக்கத்தக்க வகையில் பாசனத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மத்தியப் பிரதேசத்தில் 94,55,000 ஹெக்டேர் பரப்பளவிலும், இராஜஸ்தானில் 76,50,000 ஹெக்டேர் பரப்பளவிலும் பாசன வசதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் இன்று வரை பாசன வசதி பெற்ற நிலங்களின் பரப்பளவு 26,79,000 ஹெக்டேர் மட்டும் தான்.
தமிழ்நாட்டில் நீடித்த விவசாயம் செய்ய இப்போதுள்ள பாசனப் பரப்பை மும்மடங்காக உயர்த்த வேண்டும். முதல்கட்டமாக தமிழகத்தின் பாசனப்பரப்பை 50 லட்சம் ஹெக்டேராக விரிவுபடுத்த வேண்டும். அதற்குத் தேவையான நீர்ப்பாசன பெருந்திட்டத்தை ரூ. 1 லட்சம் கோடியில் அடுத்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தி முடிக்க மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்க வேண்டும் என்று பா.ம.க. கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 7 : தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஹைட்ரோ-கார்பன் திட்டங்களை ரத்து செய்யவேண்டும்
தமிழ்நாட்டிற்கும், காவிரி பாசன மாவட்டங்களுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்திருப்பவை ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் ஆகும். தமிழ்நாட்டில் இதுவரை 4 ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதுடன், விரைவில் 1863.24 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மேலும் இரு ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவுள்ளது.. இவற்றையும் சேர்த்தால் தமிழகத்தில் 5000 சதுர கி.மீ பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அரசு அனுமதி அளித்திருக்கும்.
காவிரி பாசன மாவட்டங்களில் மட்டும் 5000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால், காவிரி பாசன மாவட்டங்களும், கடலூர், விழுப்புரம் மாவட்டமும் பாலைவனமாவதை தடுக்க முடியாது. அதுமட்டுமின்றி, சுற்றுச்சூழலுக்கும் கடுமையான பாதிப்புகள் ஏற்படும். அதனால் ஏற்படும் மாற்றங்களால் தமிழகம் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
காவிரி டெல்டாவுக்கு இணையான வளம் கொண்ட நைஜீரியாவின் நைஜர் டெல்டாவில் இத்தகைய ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதால் அங்கு உழவுத்தொழில் அழிந்தது. எண்ணெய் வளத்துடன், உழவர்களின் வாழ்வாதாரமும் சுரண்டப்பட்டது. இதனால் அங்கு அறிவிக்கப்படாத உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அதேபோன்ற நிலை தமிழகத்திலும் ஏற்படுவதை தடுக்க காவிரி பாசன மாவட்டங்களில் அறிவிக்கப்பட்ட அனைத்து ஹைட்ரோ கார்பன் திட்டங்களையும் கைவிட வேண்டும் என்று மத்திய அரசை பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 8 : காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்!
காவிரி படுகைக்கு ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் மட்டுமின்றி வேறு சில அச்சுறுத்தல்களும் உள்ளன. கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 45 கிராமங்களில் 53 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டை பகுதியில் மிகப்பெரிய அளவில் சாயப் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. நரிமனம் பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அதன் இப்போதைய திறனை விட 10 மடங்கு அதிக அளவுக்கு விரிவாக்கம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக 600 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மத்திய அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, காவிரி பாசன மாவட்டங்களையொட்டிய கடலோரப் பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட அனல் மின்னுற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. சுற்றுச்சூழலைக் கெடுக்கும் இந்தத் திட்டங்கள் அனைத்தும் செயல்பாட்டுக்கு வந்தால் காவிரி பாசன மாவட்டங்கள் நெற்களஞ்சியமாக இருக்காது; மாறாக எண்ணெய்க் கிணறுகள் நிறைந்த பாலைவனமாக மாறிவிடும். அப்படி ஒரு நிலை ஏற்படாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு அரசுகளுக்கு உள்ளது. எனவே, காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப் பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும்படி மத்திய, மாநில அரசுகளை பா.ம.க. பொதுக்குழு கோருகிறது.
தீர்மானம் 9 : பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களுக்கு உடனடி விடுதலை அல்லது காலவரையற்ற பரோல் வழங்க வேண்டும்
இராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் தவறுதலாக தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. அதனடிப்படையில் 7 தமிழர்களையும் விடுதலை செய்ய ஆளுனருக்கு பரிந்துரை செய்து தமிழக அமைச்சரவை கடந்த 09.09.2018 அன்று தீர்மானம் நிறைவேற்றியது. அதன் பின்னர் இன்று வரை 479 நாட்களாகிவிட்ட நிலையில் இதுவரை அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை.
மிக எளிதில் முடிவெடுக்கக்கூடிய இவ்விஷயத்தில் காரணமே இல்லாமல் காலதாமதம் செய்யப்படுவதும், தமிழர்களை விடுதலை செய்வதில் தமக்கு உடன்பாடில்லை என்று தமிழக ஆளுனர் அதிகாரப்பூர்வமற்ற முறையில் கூறிவிட்டதாக செய்திகள் வெளியாவதும் கவலையளிக்கின்றன. ஒரு மாநிலத்தின் ஆளுனராக இருப்பவர் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை ஒதுக்கி வைத்து விட்டு, சட்டத்தின் அடிப்படையில் தான் முடிவெடுக்க வேண்டும். அதன்படி, 7 தமிழர்களை விடுதலை செய்ய ஆளுனர் ஆணையிட வேண்டும்.
7 தமிழர்கள் விடுதலை பற்றி முடிவெடுப்பதில் ஆளுனர் மாளிகை காலதாமதம் செய்தால், 29 ஆண்டுகளாக சிறையில் வாடும் தமிழர்களுக்கு தற்காலிக நிவாரணம் வழங்கும் வகையில் அவர்களுக்கு நீண்டகால பரோல் வழங்குவதற்கான வாய்ப்புகளை ஆராயும்படி தமிழக அரசை பா.ம.க. கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 10: புவிவெப்பமயமாதலை கட்டுப்படுத்த காலநிலை அவசரநிலையை பிரகடனம் செய்க!
காலநிலை மாற்றமும், அதன்விளைவாக புவிவெப்பநிலை உயர்ந்து வருவதும் இந்தியாவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கிறது. 150 ஆண்டுகளுக்கு முன் 14 டிகிரி செல்சியசாக இருந்த பூமியின் சராசரி வெப்பநிலை தொழில்புரட்சிக்குப் பிறகு இப்போது 15.1 டிகிரி செல்சியசாக உயர்ந்துள்ளது. ஒரு டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை அதிகரித்ததற்கே மிகப்பெரிய அளவில் இயற்கை பேரழிவுகளை உலகம் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலை கட்டுப்படுத்தப்படாவிட்டால் எந்த நேரமும், எந்தவகையான பேரழிவும் நம்மை தாக்கும் ஆபத்து உள்ளது.
தமிழ்நாட்டில் பேரழிவுகள் ஏற்படுவதற்காக அறிகுறிகள் கடந்த சில ஆண்டுகளாக தென்படத் தொடங்கியுள்ளன. இவற்றைத் தடுக்க வேண்டுமானால், உலகின் சராசரி வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்த வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை 2030-ஆம் ஆண்டுக்குள் செய்து முடிக்க வேண்டும். இந்த விஷயத்தில் உலகின் பல நாடுகள் அலட்சியமாக இருந்தாலும் கூட, ஐரோப்பிய நாடுகள் புவிவெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வசதியாக காலநிலை நெருக்கடி நிலையை பிரகடனம் செய்துள்ளன. அதேபோல், நமது மத்திய, மாநில அரசுகளும் காலநிலை நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்த வேண்டும்; காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்தும்படி பா.ம.க. வலியுறுத்துகிறது.
தீர்மானம் 11 : தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்!
இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் தரமான சாலைகளை அமைக்க வேண்டும்; அதற்கான செலவை அச்சாலைகளை பயன்படுத்துவோரிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் இந்தியாவில் சுங்கக்கட்டண சாலைகள் உருவாக்கப்பட்டன. ஆனால், இப்போது அந்த சாலைகள் வாகன உரிமையாளர்களை சுரண்டும் சாலைகளாக மாறிவிட்டன.
தமிழ்நாட்டில் 45 சுங்கக் கட்டண சாலைகள் உள்ளன. இவற்றில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ள பல சுங்கக்கட்டண சாலைகளில், அவற்றை அமைப்பதற்காக செய்யப்பட்ட முதலீடு பல ஆண்டுகளுக்கு முன்பே திரும்ப எடுக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. அவ்வாறு எடுக்கப்பட்ட சாலைகளில் பராமரிப்பு செலவுகளுக்காக 40% கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய விதிகள் தெரிவிக்கின்றன. ஆனால், அந்த சாலைகளில் முதலீடு இன்னும் எடுக்கப்படவில்லை என்று கூறி, முழுமையான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது பெரும் அநீதி ஆகும். இந்த அநீதியைப் போக்கும் வகையில் அனைத்து சுங்கச்சாலைகளிலும், அவை அமைக்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட்டிருக்கிறது என்பதை வசூல் தணிக்கை மூலம் கண்டறிந்து, முதலீடு எடுக்கப்பட்ட சாலைகளில் சுங்கக்கட்டணத்தை ரத்து செய்து, பராமரிப்பு செலவுகளுக்கான கட்டணத்தை மட்டும் வசூலிக்க அரசு ஆவண செய்ய வேண்டும்.
சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் சாலைகளில் பராமரிப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படுவதில்லை என்று சென்னை உயர்நீதிமன்றமே கண்டனம் தெரிவித்துள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியும் இதை பல தருணங்களில் சுட்டிக்காட்டியிருப்பதுடன், போராட்டங்களையும் நடத்தியுள்ளது. இத்தகைய சாலைகள் முழுமையாக சீரமைக்கப்படும் வரை, அவற்றில் 50% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 12 : தமிழ்நாட்டில் தனியார்துறை வேலைவாய்ப்புகளில் 80% உள்ளூர் ஒதுக்கீடு தேவை
தமிழ்நாட்டில் அரசு மற்றும் பொதுத்துறை வேலைவாய்ப்புகள் வெகுவாக குறைந்து விட்டன. தமிழகத்தில் உள்ள மத்திய அரசு மற்றும் மத்திய பொதுத்துறை பணிகளில் பெரும்பாலானவற்றை வட இந்தியர்கள் சட்ட விரோதமாக கைப்பற்றி வரும் நிலையில், அமைப்பு சார்ந்த தனியார்துறை வேலைவாய்ப்புகளாவது மண்ணின் மைந்தர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆனால், தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளிலும் வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஊடுருவது அதிகரித்து வருகிறது.
இத்தகைய நிலை ஏற்படுவதை தடுப்பதற்காகத் தான் 21 ஆண்டுகளுக்கு முன் 1998-ஆம் ஆண்டு மறைமலைநகர் ஃபோர்டு மகிழுந்து நிறுவனத்தில் உள்ளூர் மக்களுக்கே வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மருத்துவர் அய்யா அவர்கள் போராட்டம் நடத்தினார். மருத்துவர் அய்யா அவர்கள் அப்போது நடத்திய போராட்டத்திற்கான காரணங்கள் இப்போதும் சற்றும் மாறாமல் அப்படியே உள்ளன.
இந்தியாவில் ஆந்திரா, கர்நாடகம், மராட்டியம், குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தனியார் துறை வேலைவாய்ப்புகளில் அதிகபட்சமாக 80% வரை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலும் மண்ணின் மைந்தர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய இத்தகைய சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. எனவே, தமிழ்நாட்டில் தனியார்துறை வேலைவாய்ப்புகளில் 80 விழுக்காட்டை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்குவதற்கான சட்டத்தை தமிழக அரசு சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.
அதேபோல், தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களின் சி மற்றும் டி பிரிவு பணியிடங்களையும் பொதுத்துறை நிறுவனங்களில் தொழிலாளர் நிலை பணியிடங்களை முழுக்க முழுக்க தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யவும் மத்திய அரசு முன்வர வேண்டும் என்று பா.ம.க. கோருகிறது.
தீர்மானம் 13 : படிப்படியாக முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த நடவடிக்கை வேண்டும்!
மது அரக்கனால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலங்களின் முதன்மையானது தமிழ்நாடு ஆகும். மது விற்பனையால் கிடைக்கும் வருமானத்தை மட்டும் தான் அரசு எந்திரம் பார்க்கக்கூடாது. மாறாக, மதுவால் குடும்பங்களில் ஏற்படும் சீரழிவுகள், உற்பத்தித் திறன் இழப்பு, பொருளாதார பின்னடைவு, குற்றங்கள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து தான் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் கவலைப்பட வேண்டும்.
குடும்ப அளவிலும், தேசிய அளவிலும் மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட நாளில் இருந்தே வலியுறுத்தி வருகிறது. கட்டுப்பாடு இல்லாமல் மது விற்கப்படுவதன் விளைவாக பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பயிலும் மாணவர்கள் மட்டுமின்றி சில மாணவிகளும் கல்வி நிறுவன வளாகத்திலேயே மது அருந்துவதும், மயங்கி விழுவதும் வாடிக்கையாக மாறிவிட்டது. இது யாருக்கும் பெருமை அளிக்கும் செயல் அல்ல. இத்தகைய சீரழிவுகளை கட்டுப்படுத்தும் நோக்குடன், காலவரையறை நிர்ணயித்து படிப்படியாக முழுமதுவிலக்கை நடைமுறைப்படுத்த பா.ம.க. வலியுறுத்துகிறது.
தீர்மானம் 14 : புதிய மாவட்டங்களை உருவாக்க குரல் கொடுத்து வெற்றி பெற்ற மருத்துவர் அய்யா அவர்களுக்கு நன்றி!
சிறியதே அழகு (Small is Beautiful) என்ற தத்துவத்தின் அடிப்படையில் தமிழகத்திலுள்ள பெரிய மாவட்டங்களைப் பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அதையேற்று விழுப்புரம் மாவட்டத்தைப் பிரித்து கள்ளக்குறிச்சி என்ற புதிய மாவட்டமும், வேலூர் மாவட்டத்தைப் பிரித்து திருப்பத்தூர், இராணிப்பேட்டை ஆகிய இரு புதிய மாவட்டங்களும், காஞ்சிபுரத்திலிருந்து செங்கல்பட்டு மாவட்டமும், திருநெல்வேலியிலிருந்து தென்காசி மாவட்டமும் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் புதிய மாவட்டம் பிரிக்கப்பட்ட பகுதிகள் இனிவரும் காலங்களில் சிறப்பான வளர்ச்சி பெறக்கூடும்.
அந்த வகையில் புதிய மாவட்டங்களை உருவாக்க குரல் கொடுத்து வெற்றி பெற்ற பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களுக்கும், புதிய மாவட்டங்களை பிரிக்க ஆணையிட்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் இப்பொதுக்குழு பாராட்டுதல்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது. மாவட்ட மறுவரையறை பணிகளை இத்துடன் நிறுத்தாமல் 12 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டம் என்ற பெயரில் புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என பாமக கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 15 : விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றியைத் தேடிக்கொடுத்த மருத்துவர் அய்யா, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோருக்கு பாராட்டுகள்!
மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தல் பாட்டாளி மக்கள் கட்சி அங்கம் வகிக்கும் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு மிகவும் முக்கியமானவையாக அமைந்தன. மக்களவைத் தேர்தலில் மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து வெற்றி பெற்றதைப் போலவே, இடைத்தேர்தலிலும் பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து வெற்றி பெற திமுக துடித்தது. அதன் ஒரு கட்டமாக தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரும்போது வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று கூறி விக்கிரவாண்டி மக்களை ஏமாற்றுவதற்கு திமுக முயன்றது. ஆனால், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் விஷயத்தில் திமுக செய்த துரோகங்களையும், வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்த போது அதை திமுக அரசு நிறைவேற்ற மறுத்ததையும் மருத்துவர் அய்யா அவர்கள் ஆதாரங்களுடன் விளக்கி கூறினார். இதனால் திமுகவின் முகமூடி கிழிந்தது.
பா.ம.க. இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களும் தொகுதி முழுவதும் தீவிர பரப்புரை மேற்கொண்டு திமுகவின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தினார். அதன் பயனாகவும், பா.ம.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் களப்பணி காரணமாகவும் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 44,782 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன் மூலம் விக்கிரவாண்டி பாட்டாளி மக்கள் கட்சியின் கோட்டை என்பதை நிரூபித்த மருத்துவர் அய்யா அவர்களுக்கும், மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கும் இப்பொதுக்குழு நன்றி தெரிவிக்கிறது.
தீர்மானம் 16 : உள்ளாட்சித் தேர்தலில் நல்லாட்சி அமைய வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி!
தமிழ்நாட்டில் 2016-ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் நீதிமன்ற வழக்குகள் காரணமாக தாமதமாயின. 3 ஆண்டுகள் தாமதத்திற்குப் பிறகு 27 மாவட்டங்களில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தவிர மீதமுள்ள 515 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், 5067 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் உள்ளிட்ட 73,405 பதவிகளுக்கு கடந்த 27 மற்றும் 30-ஆம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சியினருக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும், களப்பணியாற்றிய அதிமுக, பா.ம.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் பா.ம.க. புத்தாண்டு பொதுக்குழு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 17 : புதுச்சேரிக்கு முழுமையான மாநிலத் தகுதி வழங்க சட்டம் இயற்ற வேண்டும்!
இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடைபெறும் இரு யூனியன் பிரதேசங்களில் புதுச்சேரியும் ஒன்றாகும். ஆனால், 1963&ஆம் ஆண்டில் தொடங்கி இன்று வரை அடிப்படை கட்டமைப்பை உருவாக்குதல், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துதல், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட சேவைகளை வழங்குவதற்கு தேவையான நிதி உள்ளிட்ட ஆதாரங்கள் இல்லாமல் புதுவை அரசு திணறி வருகிறது.
புதுவை துணை நிலை ஆளுனருக்கும், முதலமைச்சருக்கும் இடையிலான இணக்கமற்ற சூழலால் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, புதுவை யூனியன் பிரதேசம் மோசமான பின்னடைவுகளை சந்தித்து வருகிறது. இந்நிலை மாற்றப்பட்டு, புதுவை வளர்ச்சிப் பாதையில் பயணிக்க வேண்டும் என பா.ம.க. விரும்புகிறது.
புதுவைக்கு முழுமையான மாநிலத் தகுதி வழங்குவதன் மூலம் தான் இச்சிக்கலுக்கு தீர்வு காண முடியும். புதுவையை மாநிலமாக்க வேண்டும் என்பது தான் புதுவை மாநில மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பும் ஆகும். எனவே, நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி, அதன் மூலம் புதுவைக்கு முழுமையான மாநிலத்தகுதி வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று பா.ம.க. பொதுக்குழு கோருகிறது.
தீர்மானம் 18: 2020-ஆம் ஆண்டை அன்புமணி தம்பிகள் படை, அன்புமணி தங்கைகள் படைகளை வலுப்படுத்தும் ஆண்டாக கடைபிடிக்க உறுதி!
பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு பொதுக்குழு கூட்டங்களில் 2018-ஆம் ஆண்டு இளைஞர்கள் எழுச்சி ஆண்டாகவும், 2019-ஆம் ஆண்டை அரசியல் விழிப்புணர்வு ஆண்டாகவும் அறிவிக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. இவற்றின் காரணமாக அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அடுத்தக்கட்டமாக அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு இளைஞர் சக்தியை தயார்படுத்தும் பணிகளை பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கியுள்ளது. இதற்காக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் வழிகாட்டுதலில் உருவாக்கப்பட்டுள்ள அன்புமணி தம்பிகள் படை, தங்கைகள் படை, மக்கள்படை ஆகியவற்றை வலுப்படுத்துவது என்று பா.ம.க. சிறப்பு பொதுக்குழு உறுதியேற்கிறது.
அன்புமணி தம்பிகள் படை, தங்கைகள் படை, மக்கள்படை ஆகியவற்றுக்கு முறையாக பயிற்சிகள் அளிப்பது, ஆலோசனைகள் வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் அன்புமணி படைகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.