விநாயகர் சதுர்த்தி 2019: விநாயகர் சதுர்த்தி பற்றிய சுவாரஷ்யமான சில தகவல்கள்..!

புகழ்பெற்ற பிள்ளையார்பட்டியில் சிறப்பு வழிபாடு!!

Last Updated : Sep 2, 2019, 09:19 AM IST
விநாயகர் சதுர்த்தி 2019: விநாயகர் சதுர்த்தி பற்றிய சுவாரஷ்யமான சில தகவல்கள்..! title=

களைகட்டும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்: புகழ்பெற்ற பிள்ளையார்பட்டியில் சிறப்பு வழிபாடு!!

விநாயகர் சதுர்த்தி: 

விநாயகர் அவதரித்த தினத்தை தான் நாம் விநாயகர் சதுர்த்தி தினமாக இந்தியா முழுவதும் கொண்டாடி வருகிறோம். விநாயகரை நாம் மொத்தம் 51 வடிவ சிலைகளை வழிபட்டு வருகிறோம். 

விநாயகர் துதி: 

துதி 1: 

ஓம் வக்ரதுண்ட விநாயகா போற்றி
ஓம் நம்பினோர் வாழ்வே போற்றி
ஓம் ஏழைக்கு இரங்கினாய் போற்றி
ஓம் விடலை விரும்பினாய் போற்றி
ஓம் எருக்குவேர் ஏற்றாய் போற்றி
ஓம் அனலாசுரனை அழித்தாய் போற்றி
ஓம் புத்தியருளும் புண்ணியா போற்றி
ஓம் ஆபத்தில் காப்பாய் போற்றி
ஓம் பாவமறுப்பாய் போற்றி
ஓம் விகடச் சக்கர விநாயகா போற்றி

துதி 2: 

கணபதி என்றிட கலங்கும் வல்வினை
கணபதி என்றிட காலனும் கை தொழும்
கணபதி என்றிட கருமம் ஆதலால்
கணபதி என்றிட கவலை தீருமே!

விநாயகர் பிறந்த கதை: 

பிரம்மா ஒரு சமயம் கொட்டாவி விடவே அதில் இருந்து சிந்தூரனன் என்ற ஓர் அரக்கன் தோன்றினான். அவனுடைய சிவந்த தேகத்தைப் பார்த்து பயந்த பிரம்மா, முன்னெச்சரிக்கையாய் அவன் கேட்காமலேயே அவனுக்கு சில வரங்களைத் தந்தார். கேட்காமலேயே வரம் கிடைத்த மமதையில் மூவுலகையும் ஆட்டிப் படைத்தான் அரக்கன். மும்மூர்த்திகளே செய்வதறியாமல் திகைக்க கணபதியைப் பணிந்தனர். விநாயகர் உடனே தோன்றி, “கவலை வேண்டாம். நான் உமா தேவியாரின் திருவயிற்றில் அவதரிப்பேன்” எனக் கூறி மறைந்தார்.

கருவுற்று உமாதேவியாரின் திருவயிற்றில், காற்றாக நுழைந்த சிந்தூரானன் குழந்தையின் தலையைத் திருகி எடுத்துக் கொண்டு போய் விட, தலையே இல்லாமல் பிறந்த குழந்தையைப் பார்த்து அனைவரும் பதறவே கலங்காதே என்று சொன்ன சிவபெருமான் முன்பொரு சமயம் கஜமுகாசுரன் கேட்டுக் கொண்டபடி அவனுடைய தலையைத் தன் குழந்தையின் தலை இருக்கும் இடத்தில் பொருத்தினார். கஜானனன் ஆனார் விநாயகப் பெருமான்.

உமாதேவியாரிடம் வளர்ந்து வந்த கஜானனன் உரிய காலம் வந்ததும் சிந்தூரனனை அழிக்கப் புறப்பட்டார். சிந்தூரனனைத் தூக்கி எடுத்துத் தன் துதிக்கையால் ஓங்கி அடித்து அவன் ரத்தத்தைத் தன் உடம்பில் பூசிக் கொண்டார். செந்நிறமான விநாயகர் அன்று முதல் "சிந்தூர விநாயகர்" என்ற பெயரும் பெற்றார். இது தான் பார்கவ புராணம்.

விநாயகருக்கு யானை முகம் உருவான கதை: 
 
நமது புராணங்களின் கூற்றுப்படி, ஒருமுறை சிவபெருமான் வெளியே சென்றிருந்த சமயம் பார்வதிதேவி நீராடச்சென்றார். அப்போது எவரையும் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்க கூடாது என விநாயகருக்கு அறிவுறுத்திவிட்டு பார்வதி தேவியார் நீராடச் சென்று விட்டார். அச்சமயம் அங்கு வந்த சிவபெருமானைப் பிள்ளையார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அதனால் கோபம் கொண்ட சிவன் பிள்ளையாரின் தலையை வெட்டி விட்டு உள்ளே சென்று விட்டார். 

அப்போது, விநாயகர் தலை இல்லாமல் கிடந்ததை கண்டு பார்வதி தேவி கோபமும், ஆவேசமும் கொண்டார். அவரை சாந்தப்படுத்துவதற்கு முடிவு செய்த சிவன், தனது கணங்களை அழைத்து வட திசையாகச் சென்று முதலில் தென்படுகின்ற ஜீவராசியின் தலையைக் வெட்டி வருமாறு பணித்தார். அதன்படி கணங்கள் வடதிசை நோக்கிச் சென்ற பொழுது அவர்களுக்கு ஒரு யானையே முதலில் தென்பட்டது.

அவர்கள் அதன் தலையை வெட்டி எடுத்துச் சென்று சிவனிடம் கொடுத்தனர். அவர் அத்தலையை வெட்டுண்டு கிடந்த பிள்ளையாரின் முண்டத்தில் வைத்து உயிரூட்டி விட்டார். இதைக் கண்டு சாந்தமடைந்த தேவியார் அகமகிழ்ந்து பிள்ளையாரைக் கட்டி அணைத்துக் கொண்டார்.

சிவன் அந்தப் பிள்ளையாருக்கு ‘கணேசன்’ என நாமம் சூட்டித் தமது கணங்களுக்கு தலைவராக நியமித்தார் என ‘நாரதபுராணத்தில்’ தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே பிள்ளையாரின் அவதார கதையாகும். 

சதுர்சி அன்று விநாயகருக்கு படைக்கும் உணவு: 

விநாயகர் சதுர்த்தி அன்று அப்பம், கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, சர்க்கரைப் பொங்கல், சுண்டல், கொய்யாப்பழம் போன்றவற்றை விநாயகருக்கு படைத்து வழிபட வேண்டும். மேலும், அருகம்புல், மல்லிகைப்பூ, எருக்கம்பூ ஆகியவை படைக்கப்பட வேண்டும்

ஜீ-செய்தி தமிழ் இணையப்பிரிவு வாசகர்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்......!

 

Trending News