திருச்சி லலிதா ஜூவல்லரியில் விலங்குகளின் முகமூடியை அணிந்து கொள்ளையர்கள் கொள்ளையடித்துள்ளனர்!
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல நகைக்கடையான லலிதா ஜூவல்லரியில் மர்ம நபர்கள், கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்து, சுமார் 36 கோடி ரூபாய் மதிப்பிலான 100 கிலோ நகைகளை அள்ளிச்சென்றுள்ளனர்.இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நகைக்கடையில் இருந்த சிசிடிவியில் பதிவான கொள்ளையர்களின் புகைப்படங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது.
அதில், விலங்குகளின் முகமூடியை அணிந்து கொள்ளையர்கள் கொள்ளையடித்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. குழந்தைகள் வைத்து விளையாடும் முகமூடிகளை அணிந்து 2 பேர் சாதாரணமாக நடந்து சென்று நகைகளை சுருட்டி சென்றுள்ளனர். அதிகாலை 2.11 மணி முதல் 3.15 மணிக்குள் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்நிலையில் நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்டது வடமாநில கொள்ளையர்கள் என்பது விசாரணையில் தெரியவந்திருப்பதாக தனிப்படை போலீசார் கூறி உள்ளனர். இன்னும் 2 நாளில் கொள்ளையர்களை பிடித்து விடுவோம் என்றும் கூறி உள்ளனர்.
கடையில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளும், அருகிலுள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இதன்மூலம் கொள்ளையர்கள் தப்பிச் சென்ற பாதையை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளை போன சமயத்தில் அந்த பகுதியில் உள்ள தொலைபேசி உரையாடல்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.