பிரபலமற்ற ஆர்.தர்மருக்கு எப்படி எம்பி சீட்டு கிடைத்தது? பின்னணி விளக்கம்

அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்களில் ஒருவராக ஆர்.தர்மர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 26, 2022, 05:09 PM IST
  • 17 வயதில் அதிமுகவில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.
  • 2019 முதல் தற்போது வரை அதிமுக ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
பிரபலமற்ற ஆர்.தர்மருக்கு எப்படி எம்பி சீட்டு கிடைத்தது? பின்னணி விளக்கம் title=

தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் காலியாகவுள்ளன. இதில் திமுகவிற்கு 3 சீட்டுகளும், கூட்டணி கட்சியான காங்கிரஸிற்கு 1 சீட்டும், அதிமுகவிற்கு 2 சீட்டுகளும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. 

இதற்காக அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி வேட்பாளர்கள் பெயர் நேற்று வெளியிடப்பட்டது. அதில் ஒரு வேட்பாளராக முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் அறிவிக்கப்பட்டார். மேலும் மற்றொரு வேட்பாளரின் பெயர் பரிந்துரைப்பதில் மிகப்பெரிய இழுப்பறி ஏற்பட்டது.

இதன் காரணம் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் தங்களது ஆதரவாளர்களை மாற்றி மாற்றி பரிந்துரைத்தனர். இதில் எம்பி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்.தர்மர், ஓ.பன்னீர்செல்வத்தின் மாபெரும் ஆதரவாளர் என்பது குறிப்பிடதக்கது. அதிமுக ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் இரு அணிகளாக பிரிந்து நின்ற போது ஓ.பன்னீர்செல்வம் பக்கம் ஆர்.தர்மர் நின்றார்.

ஆர்.தர்மரின் அரசியல் பயணம்:

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றியம் புளியங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஆர்.தர்மர். 1970ஆம் ஆண்டு பிறந்த இவரின் குடும்பத்தொழில் விவசாயமாகும். 

ஆர்.தர்மர் தனது 17 வயதில் அதிமுகவில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். அவரது தொடர் முயற்சியின் காரணமாக 3 வருடத்தில், 1990 முதல் 1995 வரை புளியங்குடி கிராம கிளை செயலாளராக தனது பணியை தொடங்கினார். 

பின்னர் 1996 முதல் 2006 வரை ஒன்றிய எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளராக பணியாற்றினார். அதையடுத்து, 2006 முதல் 2014 வரை முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர், 2014 முதல் 2016 வரை மாவட்ட செயலாளர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார். இதற்கிடையில் முதுகுளத்தூர் ஒன்றிய துணை பெரும் தலைவராக பொறுப்பேற்று பணிபுரிந்து வந்தார்.

இதன் பின்னர் 2019 முதல் தற்போது வரை அதிமுக ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வருகிறார். மேலும் முதுகுளத்தூர் கூட்டுறவு நிலவள வங்கி தலைவராக இருமுறை பொறுப்பில் இருந்தார். பின்னர், தொடர்ந்து 20 ஆண்டுகள் ஒன்றிய யூனியன் கவுன்சிலராகவும் பதவி வகித்து வந்துள்ளார். 

மேலும் இவர் தென் மாவட்டங்களை கடந்து மற்ற பகுதிகளில் அதிக அறிமுகம் இல்லாதவர் என்பது குறிப்பிடதக்கது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட தர்மர் விரும்பியதாக தெரிகிறது. ஆனால், அப்போது கீர்த்திகா முனியசாமிக்கே கட்சித் தலைமை வாய்ப்பு அளித்தது என்பது குறிப்பிடதக்கது. 

இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் பரிந்துரையால் அவரது தீவிர விசுவாசியான ஆர்.தர்மருக்கு மாநிலங்களவையில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

கடைக்கோடி தொண்டருக்கும் வாய்ப்பளிப்பது முன்னாள் முதல்வர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வழக்கமாகும். அவர் அந்த தாரக மந்திரத்தின்படியே ஓ.பன்னீர்செல்வத்திற்கு முதல்வர் வாய்ப்பு தந்துவிட்டுச்சென்றார்.

அந்த வகையில் பார்த்தால் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரானாலும், கடைக்கோடி தொண்டர் என்ற முறையில் ஆர்.தர்மருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Trending News