மதுரை: அலங்காநல்லூரில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தியதால் சுமார் 500-க்கும் மேற் பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறாத நிலையில் இந்த வருடமாவது ஜல்லிக்கட்டு நடக்கும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த வருடமும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைக்கவில்லை.
எனவே, மதுரை மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கிளர்ந்து எழுந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர்.
இந்நிலையில், பொங்கல் தினத்திலும், அதற்கு மறுநாளும் அவனியாபுரம், பாலமேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இளைஞர்கள் ஜல்லிக்கட்டு காளைகளை அவிழ்த்து விட்டு போராட்டம் நடத்தினர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் தை நாளான நேற்று கடைகள் அடைக்கப்பட்டு, அனைவர் வீடுகளிலும் கருப்பு கொடி கட்டப்பட்டிருந்தது.
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த திரண்டு வாருங்கள் என சமூக வலைத்தளங்கள் மூலம் ஏற்கனவே பல்வேறு அமைப்பினர் அழைப்பு விடுத்திருந்தனர்.
இந்த அழைப்பை ஏற்று இளைஞர்கள், மாணவர்கள் நேற்று அதிகாலை முதலே அலங்காநல்லூரில் ஒன்று திரண்டனர்.
இந்நிலையில், கிராம மக்கள் சார்பில் கோவில் காளைகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. அதன்பின்னர் அந்த காளைகள் வாடிவாசல் அருகே உள்ள காளியம்மன், முத்தாலம்மன் கோவில்களுக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அதற்கு மேல் அவர்கள் வாடிவாசல் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை.
சிறிது நேரத்தில் ஒரு தெருவுக்குள் இருந்து வந்த காளை கூட்டத்தில் சீறிப்பாய்ந்து ஓடியது. அதை அடக்க வீரர்கள் முயன்றனர்.
இதைத்தொடர்ந்து அலங்காநல்லூர் மேற்கு பகுதியில் இருந்து ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்கள், மாடுபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் 3 காளைகளுடன் ஊர்வலமாக வந்தனர். பஸ் நிலையம் அருகே வந்த அவர்கள் போலீசார் வைத்திருந்த தடுப்பு கம்பிகளை ஒதுக்கி விட்டு தடையை மீறி வாடிவாசலுக்கு சென்றனர். அங்கு போலீசார் காளைகளுடன் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
காளைகளை அடக்கு வதற்கு ஆர்வமாக ஓடிவந்த இளைஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். மேலும் தடையை மீறி ஜல்லிகாட்டு நடத்திய 500 பேரை போலீசார் கைது செய்தனர்.