தமிழ்நாட்டைப் பற்றி ஒன்றும் தெரியாத அண்ணாமலைகள் வாயை மூடிக்கொண்டு இருப்பது நல்லது: வைகோ

முல்லைப் பெரியாறு பிரச்சினையைப் பற்றி அகரம்கூடத் தெரியாத அண்ணாமலைகள் என் பெயரை உச்சரிக்க எந்தத் தகுதியும் கிடையாது என வைகோ காட்டமாக கூறியுள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 12, 2021, 03:57 PM IST
தமிழ்நாட்டைப் பற்றி ஒன்றும் தெரியாத அண்ணாமலைகள் வாயை மூடிக்கொண்டு இருப்பது நல்லது: வைகோ title=

முல்லைப் பெரியாறு அணை குறித்து கருத்துக் கூற பாரதிய ஜனதாவுக்கு எந்தத் தகுதியும் கிடையாது என காட்டமாக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். அதுக்குறித்து அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். 

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, 
முல்லைப் பெரியாறு அணை இருக்கின்ற பகுதி தமிழ்நாட்டைச் சேர்ந்தது ஆகும். சென்னை ராஜதானியாக இருந்தபோது, திருவிதாங்கூர் சமஸ்தானமும், தமிழ்நாடு அரசும் 999 ஆண்டுகளுக்குச் செய்துகொண்ட ஒப்பந்தமாகும். முல்லைப் பெரியாறு அணை தமிழ்நாட்டுக்கே உரியதாகும். 8000 ஏக்கருக்கு குத்தகைப் பணம் தமிழ்நாடு அரசு திருவிதாங்கூருக்குத் தர வேண்டும். அதை அதிகப்படுத்தி வேண்டுமானால் அவர்கள் கேட்கலாம்.

முல்லைப் பெரியாறு அணை ஆயிரம் ஆண்டுகளுக்கு வலுவாக இருக்கக்கூடிய அணையாகும். 1978 இல் கேரள அரசு 555 அடி உயரத்திற்கு இடுக்கி அணையைக் கட்டியது. அதற்குத் தண்ணீர் தேவை. முல்லைப் பெரியாறு அணையை உடைத்துவிட்டால், அவர்களுக்கு அந்தத் தண்ணீர் கிடைக்கும். இந்தச் சதித் திட்டத்தோடுதான் மலையாள மனோரமா பத்திரிகை, முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாக வஞ்சகமாக ஒரு பொய்ச் செய்தியைப் பரப்பியது. 

ஏற்கனவே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 152 அடி உயரத்திற்கு நிரப்பிக் கொள்ளலாம் என்பதைக் குறைத்து, தற்காலிகமாக 136 அடியாகக் குறைத்துக்கொள்வது என்றும், பேபி அணையை வலுப்படுத்திய பிறகு மீண்டும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்திக்கொள்ளலாம் என்று கேரள அரசும், தமிழக அரசும் ஒரு புதிய ஒப்பந்தத்தைச் செய்துக்கொண்டது.

முல்லைப் பெரியாறு அணையை இங்கிலாந்து நாட்டில் பிறந்த பென்னி குயிக் பொறியாளர்  தியாகம் செய்து கட்டினார். ஒரு கட்டத்தில் அரசாங்கம் பணம் தராத போது, இங்கிலாந்தில் உள்ள அவரது சொத்துக்களை விற்று, அந்தப் பணத்தைக் கொண்டுவந்து அணையைக் கட்டினார்.

அணை பலவீனமாக இருக்கிறது என்று கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. தமிழ்நாடு அரசு அதை எதிர்த்து வழக்குத் தொடுத்தது. வழக்கின் முடிவில் மூன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அமர்வு, முல்லைப் பெரியாறு அணையில் முதலில் 142 அடி வரை தண்ணீரை உயர்த்திக்கொள்ளலாம் என்றும், அதன்பின்னர் 145 அடி உயர்த்தலாம் என்றும், பின்னர் பேபி அணையை வலுப்படுத்திய பிறகு 152 அடி வரை உயர்த்திக்கொள்ளலாம் என்றும் தீர்ப்புக் கொடுத்தது.

இதனை எதிர்த்து கேரள அரசு உச்சநீதிமன்றத்திற்குச் சென்றது. அணையின் வலிமையைச் சோதிப்பதற்காக உயர்நீதிமன்றம் ஏற்கனவே ஒரு நிபுணர் குழு அமைத்திருந்தது. அந்தக்குழு அணை வலுவாக இருக்கிறது என்று அறிக்கை கொடுத்தது.

இந்தக் கட்டத்தில் கேரள அரசு, புதிய அணை, புதிய கரார் என்ற குரலை எழுப்பி, ஏற்கனவே இருக்கின்ற அணையை உடைப்போம் என்றது.

இந்தக் கட்டத்தில்தான் நான் கட்சி மாச்சரியங்களைக் கடந்து, ஐந்து மாவட்ட பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கம்பம் அப்பாஸ் அவர்களோடு ஐந்து மாவட்டங்களிலும் முல்லைப் பெரியாறைப் பாதுகாக்க வேண்டும். இல்லையேல், கோடிக்கணக்கான மக்களுக்குக் குடிக்கத் தண்ணீர் கிடைக்காது.
 
இலட்சக்கணக்கான ஏக்கர் நிலம் பாசனத்தை இழக்கும் என்ற பிச்சாரத்தை முன்வைத்து மக்களைத் திரட்டினேன். கட்சிக் கொடி கட்டாமல் பொதுமக்களை, விவசாயிகளைத் திரட்டினேன். விழிப்புணர்வு ஏற்பட்டது. நான்கு முறை உண்ணாவிரத அறப்போர் நடத்தினேன். கேரளத்திற்குச் செல்லுகின்ற 13 சாலைகளையும், இரண்டு முறை தடுத்து முற்றுகைப் போராட்டம் நடத்தினேன். 

அப்பொழுதுதான் கேரள முதலமைச்சர் அச்சுதானந்தன், “உங்களிடம் ஒரு வைகோ இருந்தால், எங்களிடம் நூறு வைகோக்கள் இருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டுச் சொன்னார். 

இந்தப் பரபரப்பான காலகட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இப்பொழுது வந்து சேர்ந்திருக்கின்ற அண்ணாமலை, முதலில் வெறும் போலிஸ் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். அவருக்குத் தமிழ்நாட்டைப் பற்றி ஒன்றும் தெரியாது. வாயை மூடிக்கொண்டு இருப்பது நல்லது.

தென் மாவட்டங்களில் முல்லைப் பெரியாறு என்றால், பென்னி குயிக் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியதே நான்தான். கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன், முல்லைப் பெரியாறு வழிந்தோடும் பகுதி புல்மேடு, வல்லக்கடவு, வண்டிப் பெரியாறு, மஞ்ச மலை, பசுமலை, தேங்கா கல், செங்கறை, உப்புத்துறை, சப்பாரி, ஆலடி, மேரிகுளம் ஆகியவைகளில் சரியாக 48 கி.மீ. தூரத்தில் இடுக்கி அணை உள்ளது. 

இந்தத் தூரத்தில் 48 தடுப்பணைகளை கேரளா கட்டிக் கொள்ளலாம். மழைக் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 555 அடி உயரத்திலிருந்து, 444 அடியாக 111 அடி நீர்மட்டத்தைக் குறைக்க வேண்டும். 

பேபி அணைப் பகுதியில் உள்ள மரங்களை அப்புறப்படுத்த அனுமதிக்க வேண்டும். அணைக்கட்டுப் பகுதியில் தமிழ்நாட்டுக்கு மும்முனை மின்சாரம் கேரளா அரசு வழங்க வேண்டும்.

இப்போதுள்ள தமிழ்நாடு அரசின் படகு பல வருடங்களுக்கு முன் செயல்பாட்டுக்கு வந்தது. ஒன்று அணைப் பகுதியிலும் மற்றொன்று தேக்கடியிலும் செயல்பட ஏற்பாடு செய்ய வேண்டும். வல்லக் கடவு - முல்லைப் பெரியாறு பாதையைச் செப்பனிட தமிழ்நாடு அரசும் திட்டம் வகுக்க வேண்டும். தேனி மாவட்ட ஆட்சியரும், இடுக்கி மாவட்ட ஆட்சியரும் அடிக்கடி கலந்து பேச வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை ஏற்கனவே தீர்க்கப்பட்டுவிட்ட ஒன்றாகும். அணையை உடைக்கலாம் என்று தற்போது கேரள அரசு திட்டம் வகுக்கிறது. அதனை எதிர்த்துத் தமிழக மக்கள் பொங்கி எழுவார்கள்.

இந்தப் பிரச்சினையைப் பற்றி அகரம்கூடத் தெரியாத அண்ணாமலைகள் என் பெயரை உச்சரிக்க எந்தத் தகுதியும் கிடையாது.

இவ்வாறு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News