சென்னை: 100 நாள் வேலை திட்டத்தின் ஒரு நாள் ஊதியம் 229 ரூபாயில் இருந்து 256 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு, இன்று உலகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. பல உயிர்களை காவு வாங்கியுள்ளது. இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது ஆனாலும் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால், ஊரடங்கு உத்தரவை மேலும் மே 3 வரை நீட்டித்து பிரதமர் மோடி உத்தரவிட்டார்.
இந்த ஊரடங்கு காலகட்டத்தில் அணைத்துப் பணிகளும் முடங்கியுள்ளன. தற்போது அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது. மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
இரண்டாவது முறையாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளதால், மக்களின் வாழ்வாதாரம் பெரும் கேள்விக்குறியாகி உள்ளது அதுவும் தினக்கூலி தொழிலாளர்கள் நிலைமை கடும் மோசமாகி வருகிறது.
இதனைக்கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் சில நிபந்தனைகளுடன் சில தொழில்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதில் ஒன்று 100 நாள் வேலைத் திட்டம் என்று அழைக்கப்படுகிற மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்.
100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் ஒருநாளைக்கு ஊதியம் 229 ரூபாயாக இருந்தது. அதனை மத்திய அரசு 256 ரூபாயாக உயர்த்தியுள்ளது. அதுகுறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. அதில் இந்த ஊதிய உயர்வு ஏப்ரல் 1 முதல் அமல் செய்யப்பட்டு உள்ளது.