சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடுமையான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. டெல்லியில் CAA சட்டத்தை திரும்ப பெறக்கோரி அமைதியாக போராட்டம் நடத்திய ஜாமியா மாணவர்கள் மீது போலீசார் தாக்குதலை நடத்தினார்கள். இந்த வன்முறையை கண்டித்து நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டங்களில் குதித்துள்ளனர். அதன் ஒருபகுதியாக தமிழகத்தில் கல்லூரிகள், பல்கலைக் கழக மாணவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் லயோலா, நியூ கல்லூரி, சென்னை பல்கலைக் கழக மாணவர்கள், சட்ட கல்லூரி மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். சென்னை பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் சில கல்லூரிகளில் உள்ளிருப்பு போராட்டத்தை மாணவர்கள் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சென்னை பல்கலைக் கழக மாணவர்களை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் நேரில் சந்தித்தார். அவர்களுடன் பேச்சுவாரத்தை நடத்தினார். அவர்களுக்கு ஆறுதலை கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல் ஹாசன், "மாணவர்களின் பாதுகாவலனாக அவர்களின் குரலாக நான் இங்கு வந்துள்ளேன். மாணவர்களுடன் பேசினேன். போராடும் மாணவர்களுக்கு உணவு கொடுக்காமல் கல்லூரி உணவகங்களை பூட்டியது இந்த அரசிற்கு அவமானம். மாணவர்கள் போராட்டம் பற்றி அரசுக்கு எந்தவித கவலையும் இல்லை. படிக்கும் இடத்திலேயே மாணவர்களை அகதியாக்கப்பட்டு உள்ளனர். இன்றைய செய்தி நாளைய சரித்திரம். மாணவர்களின் போராட்டத்துக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். மாணவர்களின் போரட்டத்துக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவு அளிக்கும். குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் எனக் கூறினார்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.