டெல்லியில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில், மத்திய அரசின் ஜி.எஸ்.டி கவுன்சிலின் அறிக்கை தொடர்பாக 24-வது ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார்.
ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின் தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
தமிழகத்தில் நிலவும் நீர் பற்றாக்குறை பற்றி மத்திய அரசிடம் எடுத்தரைக்கப்பட்டது. காவிரி நதி நீர் பிரச்சனை குறித்து மத்திய அரசிடம் எடுத்துரைத்தோம். தமிழகத்திற்கு தேவையான நிதியை ஒதுக்குமாறு மத்திய அரசி்டம் வலியுறுத்தியுள்ளோம். கோதாவரி- கிருஷ்ணா பெண்ணையாறுகளை இணைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மரணம் அடைந்த நாள் தொடர்பாக திவாகரனின் வெளியிட்டுள்ள தகவல் தொடர்பாக கருத்து எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருவதால் என்னால் எதுவும் கூற இயலாது.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சியினைத் தொடங்கலாம். ஆனால், அவர்கள் இருவரும் இறுதியில் மக்களைச் சந்திக்க வேண்டும், ஜனநாயகத்தில் மக்கள்தான் இறுதி எஜமானர்கள்.
தில்லியில் மர்ம மரணம் அடைந்த மாணவர் சரத் பிரபு விவகாரத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. முழுமையான பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு தெளிவான விபரம் கிடைக்கும்.
பிரதமர் மோடியுடனான உறவில் எந்த விரிசலும் இல்லை, விரிசல் ஏற்படபோவதுமில்லை கருத்துக்கணிப்பில் திமுக முதலிடம் என்ற கேள்விக்கு, சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 வருடங்கள் உள்ளது, அப்போதைய சூழலை தற்போதே கணிக்க இயலாது என்றார்.