மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி துவங்கி நடந்து வருகிறது. இதனை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடந்து முடிந்தது.
அதை தொடர்ந்து, மாட்டுப் பொங்கல் தினமான இன்று ஜன.,15-ம் தேதி பால மேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது.
ஜல்லிக்கட்டில் பங்கேற்க 1000 காளைகள், 1188 வீரர்களுக்கு டோக்கன் தரப்பட்டுள்ளது. காளை, வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் சிகிச்சை தர மருத்துவக் குழு தயார்நிலையில் உள்ளது. 7 கிராமத்து மரியாதைக் காளைகள் முதலில் களத்தில் இறக்கி விடப்பட்டன. பத்து மருத்துவ குழுக்கள் அமைக்கபட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
அதன் பிறகு, வாடிவாசல் வழியாக ஜல்லிக்கட்டு காளைகள் சீறிப்பாய்ந்து வருகிறது. அவற்றை பிடிக்க மாடுபிடி வீரர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். மாடுபிடி வீரர்கள் உற்சாகமாக காளைகளை அடக்கியும் வருகிறார்கள். காளைகளின் திமிலை பிடித்தே அடக்க வேண்டும். 15 மீட்டர் தூரத்திற்குள் பிடிக்க வேண்டும் என்ற விதிமுறைகளை கருத்தில் கொண்டு வீரர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.
2 ஆண்டுகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு நடப்பதால், இதனை காண ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்து குவிந்து உள்ளனர். அவர்கள் விசில் அடித்தும் பலத்த கரகோஷம் எழுப்பியும், வீரர்களை உற்சாகப்படுத்திக் கொண்டே உள்ளனர்.
பார்வையாளர்களுக்காக இரண்டு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காளைகளுக்கும் வீரர்களுக்கும் அடிபடாமல் இருப்பதற்காக தேங்காய் நார்கள் போடப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ்களும், மொபைல் ஆம்புலன்ஸ்கள் மற்றும் கால்நடை ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி ஆணையர் காவல் ஆணையர் நேரடி கண்காணிப்பில் 650க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியி்ல் ஈடுபட்டு உள்ளனர்.
இதுவரை நடந்து முடிந்த முதல் சுற்றில் 78 காளைகள் இறக்கபட்டன. 10 பேர் காயம் அடைந்தனர். மேலும்,விதிகளை மீறியதாக 2 மாடுபிடி வீரர்கள் வெளியேற்றபட்டனர்.
பாலமேடு ஜல்லிக்கட்டில் அதிகளவிலான காளைகள் பங்கேற்க உள்ளதால், போட்டியின் நேரத்தை நீட்டிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
Tamil Nadu: Visuals from a #Jallikattu event in Madurai pic.twitter.com/SVZpbinnHW
— ANI (@ANI) January 15, 2018