உலகின் முதல் இணைய சுவடிகள் நூலகம் என்ற பெருமையை பெற்ற அரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம், தொல்லியல் துறையின் கீழ், சென்னை பல்கலை வளாகத்தில் இயங்கி வருகிறது. இங்கு, 26 லட்சம் ஓலைச்சுவடிகளை கொண்ட, 72,748 சுவடி கட்டுகளும், 25,373 ஆய்வு நூல்களும் உள்ளன. விடுதலைக்கு முன் இருந்த இந்தியாவின், தலைமை நில அளவையாளர் காலின் மெக்கன்சி உள்ளிட்டோர் சேகரித்த, வாய்மொழி எழுத்தாக்கம் பெற்ற குறிப்பேடுகள், தாள் சுவடிகள், 300 ஆண்டுகளுக்கு முந்தைய ஓலைச்சுவடிகள் இங்கு, பாதுகாக்கப் படுகின்றன.
ஓலைச்சுவடிகளின் வகைப்பாடு
இந்த நூலகத்தில், தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், கன்னடம், மராத்தி, பாலி, உருது, அரபி, பெர்ஷியன் உள்ளிட்ட பல்வேறு மொழிகளின், ஆவணங்களும், மொழி கண்டறிய முடியாத சுவடிகளும் உள்ளன. இவற்றில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி ஆகிய மருத்துவ குறிப்புகள், கணிதம், வானியல், வேதங்கள், ஆகமங்கள், கட்டட கலை, இசை, சிற்பம், கவின் கலைகள், வரலாறு, இலக்கண, இலக்கியங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் உள்ளன.
எகிப்து நாட்டின், அலெக்சாண்டிரியா நகரில் உள்ள, மிகப் பழமையான நூலகத்திற்கு இணையானது என்ற பெருமையைப் பெற்றது அரசு கீழ்த்திசை சுவடிகள் நூலகம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, உலக அளவிலான ஆராய்ச்சியாளர்களின் வசதிக்காக, அனைத்து ஓலைச்சுவடிகளையும் (ஆவணங்களையும்) ஸ்கேன் செய்து, இணையதளத்தில் வெளியிடும் முயற்சியை இந்திய தொல்லியல் துறை முடிவு செய்து, அதன் அடிப்படையில் இதுவரை 30 லட்சம் ஓலைச்சுவடிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுவிட்டன.
டிஜிட்டல் தொழில்நுட்பம்
எல்காட் நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன், ஓலைச்சுவடிகளை, லெமன்கிராஸ் எண்ணெய், சிட்ரெனெல்லா எண்ணெய், கார்பன் உள்ளிட்டவற்றை கொண்டு பதப்படுத்தி ஸ்கேன் செய்து, இணையதளத்தில், இந்த வரலாற்று பொக்கிஷங்களை தொல்லியல் துறை பதிவேற்றம் செய்து வருகிறது.
டிஜிட்டல்மயமாகும் ஓலைச்சுவடிகள்
இந்த ஆவணங்கள் 600 டி.பி.ஐ., கொண்ட வண்ணப் படங்களாக மாற்றப்பட்டு, பி.டி.எப். வடிவத்தில், இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை மூன்று லட்சம் பக்கங்களுக்கு மேல் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளன. அவை, http:/www.tnarch.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட உள்ளன.
தொல்லியல் துறை சார்ந்த ஆய்வேடுகள், அகழாய்வு, சோழர்கால சிலைகள், சிந்துவெளியும் சங்கமும் குறித்த சான்றுகள், கல்வெட்டுகள், குடைவரை ஓவியங்கள், தமிழக செப்பேடுகள், கோவில்கள், காசுகள், மாவட்ட வரலாறுகள் உள்ளிட்ட அரிய ஆவணங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. இதனால், உலகெங்கிலும் பண்டைய, இந்திய, தமிழ் பண்பாடு, கலை, கலாசாரம் குறித்த ஆய்வுகளும், கருத்துருக்களும், விவாதங்களும் தற்போது டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க | தன்னைத்தானே கிண்டல் செய்துக் கொள்ளும் எலோன் மஸ்க்! ட்விட்டரின் புதிய CEO எப்படி?
அரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம்
ஆராய்ச்சி மாணவர்கள் பலர் இங்கு வந்து தங்களுக்குத் தேவையான விஷயங்களை சேகரித்துச் செல்கின்றனர். மேலும் வெளிநாட்டினரும் இங்கு உள்ள ஓலைச்சுவடிகளை பார்த்துச் செல்கின்றனர்.
தமிழகத்தில் உள்ள 12,617 ஓலைச்சுவடிகளின் அடிப்படை விவரங்களைத் திரட்டி, அதில் 1,862 சித்த மருத்துவ சுவடிகளை பதிவு செய்திருக்கிறார்கள். இதனால், குறுந்தகடு மூலம் சித்த மருத்துவ ஆய்வாளர்கள் தகவல்களை எளிதாகப் பெறமுடிகிறது.
ஆராய்ச்சி மாணவர்கள்
பழமையான ஓலைச்சுவடிகளை சேகரித்து வைத்திருப்பவர்கள் இங்கு வந்து அவற்றைக் கொடுத்தால், சென்னை அருங்காட்சியகத்திலுள்ள சுவடிப் பாதுகாப்பு மையம் மூலம் எவ்விதக் கட்டணமும் இன்றி உரிய வேதிப் பொருட்கள் இட்டு, ஓலைச்சுவடிகள் சீரமைத்து தரப்படுகிறது.
அரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகத்தில், பழைய ஓலைச்சுவடிகள் விலை கொடுத்து வாங்கிக் கொள்ளப்படுகிறது. மேலும், ஓலைச்சுவடிகள் அன்பளிப்பாகவும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
மேலும் படிக்க | மீண்டும் திருமணம் செய்ய உள்ள ஹர்திக் பாண்டியா! ஏன் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ